தூத்துக்குடியில் வாலிபர் தலை துண்டித்து கொலை; கொலையாளிக்கு போலீஸ் வலைவீச்சு..!


தூத்துக்குடியில் வாலிபர் தலை துண்டித்து கொலை;  கொலையாளிக்கு போலீஸ் வலைவீச்சு..!
x
தினத்தந்தி 7 May 2022 4:18 PM GMT (Updated: 2022-05-07T21:48:33+05:30)

தூத்துக்குடியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் அரசுக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது. முன்பு பனைவாரிய அலுவலகமாக செயல்பட்டு வந்த இந்த கட்டிடம் தற்போது பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து காணப்படுகிறது.

இந்த கட்டிடத்தின் மாடியில் இன்று காலை துர்நாற்றம் வீசியதுடன் காக்கைகள் கூட்டமாக கத்தியபடி இருந்ததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தென்பாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில் தென்பாகம் போலீசார் விரைந்து சென்று அந்த கட்டிடத்தை பார்வையிட்டனர். அப்போது அந்த கட்டிடத்தின் மாடியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை சிதைக்கப்பட்டு உடல் அருகே ரத்தவெள்ளத்தில் கிடந்தது.

தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை போலிசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இவர் தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி தெருவைச் சேர்ந்த பிரபு (42) என தெரியவந்தது. இவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கட்டடத்தின் மேல்தளத்தில் மது அருந்தி உள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவருடன் இருந்தவர்கள் பிரபுவை கத்தியால் குத்தியும், தலையை துண்டித்தும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

கொலையுண்ட பிரபு மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாவும், அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டதாகவும் போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

மேலும் கொலை நிகழ்ந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமிராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில்  கொலையாளிகளை போலிசார் தேடி வருகின்றனர்.


Next Story