தருமபுரம் ஆதினத்தின் பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்


கோப்புப்  படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 8 May 2022 10:06 AM GMT (Updated: 8 May 2022 10:10 AM GMT)

தருமபுரம் ஆதினத்தின் பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்திருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று `பட்டினப் பிரவேசம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்குத் திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார்.  தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பின. 

இந்த விவகாரம் தமிழக சட்டப்பேரவை வரை எதிரொலித்தது. இது குறித்து சட்டசபையில் விளக்கம் அளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “தருமபுரம் விவகாரம் குறித்து ஆதீனங்களுடன் பேசி அரசு சுமூக தீர்வு காணும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே தருமபுரம் ஆதீனம் இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பட்டின பிரவேசம் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியதாகவும், விருப்பப்பட்டுதான் தொண்டர்கள் ஆதீனத்தை சுமக்கின்றனர் என்றும் கூறினார்.

இந்த நிலையில் தருமபுரம் ஆதினத்தின் பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து செல்வதற்கு பிறப்பிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Next Story