அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணின் ‘கிரெடிட் கார்டில்’ ரூ.1½ லட்சம் மோசடி


அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணின் ‘கிரெடிட் கார்டில்’ ரூ.1½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 10 May 2022 12:54 AM IST (Updated: 10 May 2022 12:54 AM IST)
t-max-icont-min-icon

வங்கி அதிகாரிபோல் பேசி அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணின் ‘கிரெடிட் கார்டில்’ ரூ.1½ லட்சம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் சத்சங்கம் தெருவைச் சேர்ந்தவர் சாம்பமூர்த்தி (வயது 61). இவருடைய மகள் அபர்ணா. இவர், 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அபர்ணாவுக்கு மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. அதே வங்கியில் ‘கிரெடிட் கார்டும்’ உள்ளது.

இந்த நிலையில் அந்த தனியார் வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட மாதாந்திர ‘கிரெடிட் கார்டு’ பரிவர்த்தனையில் சில பிழைகள் இருந்ததால் இதுபற்றி வங்கிக்கு சென்று விசாரிக்கும்படி தனது தந்தையிடம் அபர்ணா கூறினார்.

அதிகாரி போல் பேச்சு

அதன்படி வங்கிக்கு சென்ற சாம்பமூர்த்தி, தனது மகளின் ‘கிரெடிட் கார்டு’ பரிவர்த்தனை குளறுபடிகளை பற்றி அதிகாரிகளிடம் கூறினார். பின்னர் அவர்கள் கொடுத்த 2 தொலைபேசி எண்ணை மகளிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இருக்கும் அபர்ணா, அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசியவர், வங்கி அதிகாரிபோல் பேச்சு கொடுத்தார். பின்னர் அபர்ணாவின் செல்போனுக்கு 3 முறை வந்த ஓ.டி.பி. எண்ணை கேட்டு பெற்றார். பின்னர் இணைப்பை துண்டித்து விட்டார்.

ரூ.1½ லட்சம் மோசடி

சிறிது நேரத்தில் அபர்ணாவின் வங்கி கணக்கில் இருந்து 3 தவணையாக ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 996 எடுக்கப்பட்டு உள்ளதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. வங்கி அதிகாரிபோல் பேசிய நபர், அபர்ணாவின் செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை பெற்று, பணத்தை சுருட்டியது தெரிந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அபர்ணா, தனது தந்தை சாம்பமூர்த்தியிடம் கூறினார். அவர் இதுபற்றி மடிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மடிப்பாக்கம் போலீசார் இந்த நூதன ஆன்லைன் மோசடி பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story