திருச்சி: பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து 35 பவுன் நகை திருட்டு..!


திருச்சி: பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து 35 பவுன் நகை திருட்டு..!
x
தினத்தந்தி 10 May 2022 4:54 AM GMT (Updated: 2022-05-10T10:24:02+05:30)

திருச்சி அருகே பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த  அபினிமங்கலத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் . இவரது மனைவி ஜெயராணி (வயது 55). இவர்களது  மகன்  கோபி.  கோபிக்கு திருமணமாகி அன்னபூரணி  என்ற மனைவி உள்ளார். கோபி கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து  வருகிறார். வீட்டில் ஜெயராணி மற்றும்  அன்னபூரணி ஆகியோர்  தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அன்னபூரணி தனது சொந்த ஊரான தேனொழுகத்திற்கு சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த ஜெயராணி நேற்று  3 மணி அளவில் தபால் நிலையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். வீட்டை பூட்டி விட்டு சாவியை வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்துள்ளார். மாலை 5 மணி அளவில் வீட்டுக்கு திரும்பும்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ திறக்கப்பட்டு உள்ளே இருந்த 35 பவுன் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். 

இதுபற்றி புலிவலம் காவல் நிலையத்தில் ஜெயராணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டில் 35 பவுன் எடையுள்ள நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

பட்டப்பகலில்  வீடு பிகுந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story