தமிழகத்தில் 10 இடங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்


தமிழகத்தில் 10 இடங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
x
தினத்தந்தி 10 May 2022 11:06 PM GMT (Updated: 2022-05-11T04:36:03+05:30)

தமிழகத்தில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் 10 இடங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

சென்னை,

ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள வர்த்தக மற்றும் ஏற்றுமதி ஒப்பந்தம் குறித்து தொழில் நிறுவனங்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்தியா-ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி ஐக்கிய அரபு நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் மொத்த ஏற்றுமதி அடிப்படையில் 90 சதவீத பொருட்களுக்கு உடனடியாக வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒப்பந்தத்தை பொறுத்தமட்டில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யும் 98 சதவீத பொருட்களுக்கு எந்தவித வரி விதிப்பும் இல்லை என்ற திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

ஏற்றுமதி மையங்கள்

இந்த ஒப்பந்தம் இந்தியாவில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு உத்வேகம் அளிக்கும். மற்ற நாடுகளுடனான போட்டியை அதிகரிக்கும். தமிழகத்தில் உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் நம் நாட்டின் ஏற்றுமதியில் 45 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகின்றன.

இதனை ஊக்குவிக்கும் விதமாக தமிழகத்தில் திருப்பூர், கரூர், மதுரை, ஆம்பூர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சீபுரம், சென்னை, கோவை, ஓசூர் ஆகிய இடங்களில் 10 ஏற்றுமதி மையங்கள் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரூ.240 கோடிக்குபுரிந்துணர்வு ஒப்பந்தம்

தென்னை நார் கயிறு உற்பத்தி மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க கோவையில் ரூ.5 கோடி செலவில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரூ.240 கோடி முதலீட்டில் 2,545 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 10 ஏற்றுமதி சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தை தொழில் வளர்ச்சியிலும் ஏற்றுமதியிலும் முதலிடத்துக்கு கொண்டு வர உறுதி ஏற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story