அகதிகள் போர்வையில் கைதிகள் - ராமேசுவரம் கடல் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து...!


அகதிகள் போர்வையில் கைதிகள் - ராமேசுவரம் கடல் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து...!
x
தினத்தந்தி 12 May 2022 10:27 AM GMT (Updated: 12 May 2022 10:27 AM GMT)

ராமேசுவரம் கடல் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ராமேசுவரம்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகின்றது. அதுபோல் இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இலங்கை சிறைகளில் இருந்து ஏராளமான கைதிகள் தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல் ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் இலங்கை கடல் பகுதி உள்ளதால் ராமேசுவரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியின் பாதுகாப்பை தீவிரப் படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தப்பிய கைதிகள்

இந்த நிலையில் இலங்கை பகுதியிலிருந்து அகதிகள் மற்றும் அகதிகள் போர்வையில் சிறையிலிருந்து தப்பிய கைதிகள், மர்ம நபர்கள் யாரும் வருவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக சென்னையில் உள்ள இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு சொந்தமான இரண்டு அதிவேக கப்பல்கள் ராமேசுவரம் முதல் தொண்டி வரையிலான இந்திய கடல் எல்லை கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகவே இரவு பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மன்னார் வளைகுடா

இதைத் தவிர மண்டபத்திலுள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 3 ஹோவர் கிராப்ட் கப்பல்களும், ஒரு அதிவேக கப்பலும் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இந்திய கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

 இது தவிர உச்சிப்புளி இந்திய கடற்படை விமான தளத்திற்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்களும் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் தாழ்வாக பறந்த படி கடலுக்குள் சந்தேகப்படும்படியான படகுகள் ஏதும் வருகின்றதா என தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

புதிய படகுகள்

அதுபோல் மீன் பிடிக்கச் செல்லும் நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்களிடமும் கடலுக்குள் சந்தேகப்படும்படியான நபர்களையோ, புதிய படகுகளையும் கண்டால் உடனடியாக கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மீனவர்களிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story