காவிநிற வழிகாட்டி பலகைகளில் கருப்பு மை

புதுவை நகர வீதிகளில் காவி நிறத்தில் வைக்கப்பட்ட வழிகாட்டி பலகைகளில் இரவோடு இரவாக மர்ம ஆசாமிகள் கருப்பு மை பூசி அழித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை நகர வீதிகளில் காவி நிறத்தில் வைக்கப்பட்ட வழிகாட்டி பலகைகளில் இரவோடு இரவாக மர்ம ஆசாமிகள் கருப்பு மை பூசி அழித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜிப்மர் விவகாரம்
புதுவையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு உள்ளூர் மற்றும் தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரி நிர்வாகத்தில் அனைத்து பதிவேடுகளும் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அதன் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பினார்.
இது தமிழ் ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., வி.சி.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின. இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் ஒரு பிரச்சினை எழுந்துள்ளது.
காவி நிறத்தில் பலகைகள்
அதாவது, புதுவையின் முக்கிய பகுதியான செஞ்சி- ஆம்பூர் சாலையில் பெரிய வாய்க்கால் சந்திப்புகளான தெபசான் வீதி- காமாட்சியம்மன் கோவில் வீதி, கலவை சுப்புராய செட்டியார் வீதி, மரைன் வீதி, காளத்தீஸ்வரன் கோவில் வீதி, லோரிஸ்தோன் வீதி- அம்பலத்தடையார் மடம் வீதி உள்ளிட்ட பல இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக வழிகாட்டி பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதில், எந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்பதற்கான குறிப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்று இருந்தன. ஆனால் வழக்கமாக நீல நிறத்தில் வைக்கப்படும் பெயர் பலகைகளுக்கு பதிலாக இந்த வழிகாட்டி பலகைகள் காவி நிறத்தில் இருந்தன.
கருப்பு வர்ணம்
இந்தநிலையில் அம்பலத்தடையார் மடம் வீதி, வைசியாள் வீதி, அரவிந்தர் வீதி மற்றும் பல இடங்களில் வைத்து இருந்த காவிநிற வழிகாட்டி பலகைகளில் இரவோடு இரவாக மர்ம ஆசாமிகள் கருப்பு மை பூசி அழித்துள்ளனர். சில இடங்களில் பெருக்கல் அடையாளம் போட்டு சென்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பலகைகளை பார்க்கும் சுற்றுலா பயணிகள் அந்த வழிகாட்டி பலகையில் குறிப்பிடப்பட்டிருப்பது தவறானதோ என்ற எண்ணத்தில் செல்கின்றனர். அழகுற அமைக்கப்பட்டிருந்த இந்த பலகைகள் இப்போது கருப்பு மை பூசப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கின்றன.
அதேநேரத்தில் ஏற்கனவே நீலநிறத்தில் வைக்கப்பட்டு இருந்த வழிகாட்டி பெயர் பலகைகள் வழக்கம்போல் பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
எனவே காவி நிற பலகைகளில் மட்டும் கருப்பு மை பூசி அழித்தது யார்? எதற்காக இதுபோல் செய்தார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story