26-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி


26-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 May 2022 4:11 AM GMT (Updated: 15 May 2022 7:39 AM GMT)

மே 26-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

புதுடெல்லி,

மே 26-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். ரூ. 12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.



சென்னையில் நடை பெறும் அரசு விழாவில் பங்கேற்க 26ந் தேதி காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ரவி மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவரை வரவேற்கிறார்கள்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத் திடல் அருகே உள்ள கடற்படை தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து காரில் விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்துக்கு வருகிறார்.

இந்த விழாவில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். நிறைவடைந்த பணிகளை தொடங்கி வைக்கிறார்.

* பெங்களூர்-சென்னை நான்கு வழி சாலையின் 3ம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

* சென்னையில் புதியதாக அமைய உள்ள மல்டி மாடல் லாஜிஸ் டிக் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

* ஓசூர்-தருமபுரி இடையேயான 2 மற்றும் 3-ம் கட்ட நெடுஞ்சாலை பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

* மீன்சுருட்டி-சிதம்பரம் இடையே புதிதாக அமைக்கப்படும் நெடுஞ்சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் மத்திய நகர்ப்புற வீட்டு வசதித் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, ரெயில்வே துறை, சார்பில் செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மொத்தம் ரூ.12 ஆயிரத்து 413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள்,  நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடியிடம் வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story