நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் 10 ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம்


நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் 10 ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம்
x
தினத்தந்தி 17 May 2022 2:11 AM GMT (Updated: 17 May 2022 2:11 AM GMT)

திருப்பூரில் நூல் விலையை குறைக்கக்கோரி 10 ஆயிரம் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொங்கின. ஈரோட்டில் 10 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன.

திருப்பூர்,

பின்னலாடை தொழிலின் முக்கிய மூலப்பொருளாக பருத்தி நூல் உள்ளது. பஞ்சின் விலை உயர்வால் நூல் விலை உயர்ந்தது. இதன் உச்சகட்டமாக கடந்த மாதம் கிலோவுக்கு ரூ.30-ம், இந்த மாதம் கிலோவுக்கு ரூ.40-ம் என நூல் விலை உயர்ந்து விட்டது. அதாவது தற்போது நூல் விலை கிலோ ரூ.480 ஆக அதிகரித்து விட்டது. கடந்த ஆண்டை விட 2 மடங்கு நூல் விலை உயர்ந்துள்ளது. பின்னலாடை உற்பத்தியாளர்கள் நூலை விலைக்கு வாங்கி ஆடை தயாரித்து விற்பனை செய்யும்போது உற்பத்தி செலவு அதிகரிப்பதால் தொடர்ந்து தொழிலை செய்ய முடியாமல் திணறி வருகிறார்கள். பஞ்சு விலை 1 கேண்டி ரூ.1 லட்சத்தை தாண்டிவிட்டது.

இந்தநிலையில் வேறுவழியின்றி திருப்பூரில் உள்ள அனைத்து பின்னலாடை தொழில் கூட்டமைப்பினர் 2 நாட்கள் தொடர் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். பஞ்சு, நூல் ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும். பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். யூகபேர வணிக பட்டியலில் இருந்து பருத்தியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. தொழிற்சங்கத்தினரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதன்படி திருப்பூரில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நேற்று காலை தொடங்கியது. இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்துக்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) உள்பட 30-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதனால் திருப்பூரில் 90 சதவீதம் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கவில்லை. இதன்காரணமாக தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கினார்கள். நேரடியாக 7 லட்சம் தொழிலாளர்கள், மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்தனர். தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள தொழிற்பேட்டைகள் வெறிச்சோடின.

இந்த உற்பத்தி நிறுத்த போராட்டம் காரணமாக ஒருநாளில் ரூ.180 கோடிக்கு பின்னலாடை உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக உற்பத்தி நிறுத்த போராட்டம் நடக்கிறது.
நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் நேற்று 10 ஆயிரம் ஜவுளிக் கடைகள் அடைக்கப்பட்டன. ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும் செயல்படவில்லை. ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாலையில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளிச்சந்தை நடைபெறும். இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏராளமானோர் வந்து ஜவுளிகளை மொத்தமாக வாங்கி செல்வது வழக்கம். ஆனால் கடையடைப்பு போராட்டம் காரணமாக ஜவுளிச்சந்தையும் செயல்படவில்லை. அதேசமயம் மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெரிய ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.

ஜவுளிக்கடைகள், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் அடைக்கப்பட்டதால் நேற்று ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இன்றும் 2-வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. இதேபோல கரூரில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்தன. இதனால் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் மற்றும் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் 260 நூல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story