100 ரூபாயை நெருங்கும் தக்காளி - இல்லத்தரசிகள் அதிர்ச்சி...!
சென்னை கோயம்பேட்டில் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.85-ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை,
சென்னை கோயம்பேடு சந்தைக்கு வடமாநில தக்காளி வரத்து குறைவால் சென்னை புறநகர் பகுதிகளில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்தது. இன்று கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ. 85-க்கும், புறநகர் பகுதிகளில் 80 முதல் 90 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை 5 கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனையான நிலையில் தற்போது அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தமிழகம் ஆந்திரா கர்நாடக மாநில தக்காளியை நம்பி வர்த்தகம் நடைபெறும் நிலையில் சென்னையின் ஒரு நாள் தக்காளி தேவை 1200 டன்னாக உள்ள நிலையில் தற்போது 500 டன் தக்காளி மட்டுமே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்துள்ளது.
கோடை வெயில், அசானி புயல் போன்றவற்றால் தக்காளி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளி வரத்து மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக தக்காளிகள் மொத்தம் மொத்தமாக அழுகி நட்டம் ஏற்படுவதால் தக்காளி கூடுதல் விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
தற்பொழுது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பெட்ரோல் , டீசல் விலை உயர்வால் 1200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூனே, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தக்காளியை கூடுதல் விலை கொடுத்து கொண்டுவருவதற்கு கோயம்பேடு ஒழுங்குமுறை விற்பனை கூட வியாபாரிகள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இதனால் தக்களாளி விலை தொடந்து அதிகரித்து வருகின்றது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story