அந்தியூர் புதுமாரியம்மன் கோவிலில் சிறுவர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்...!


அந்தியூர் புதுமாரியம்மன் கோவிலில் சிறுவர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்...!
x
தினத்தந்தி 18 May 2022 2:33 PM IST (Updated: 18 May 2022 2:33 PM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே புதுமாரியம்மன் கோவிலில் சிறுவர்கள் மட்டுமே தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.

அந்தியூர்,

 ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற புதுமாரியம்மன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு குண்டம் திருவிழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கடந்த புதன்கிழமை  பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தினந்தோறும் புது மாரியம்மனுக்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்தனர் . 

அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. அப்போது, புதுமாரியம்மன் சிறிய தேரில் எழுந்தருள பக்தர்கள் தோள்மீது சுமந்து கொண்டு வீதி உலா வந்தனர். அவற்றை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் வைத்து சாமிக்கு படைத்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா நடைபெற்றது. அதில் 25 அடி நீளத்திற்கு குண்டம் தயார் செய்து, அவற்றில் ஊஞ்சமரத்தின் விறகுகளை மட்டுமே பயன்படுத்தி அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அவற்றில் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள ஆண் குழந்தைகள் மட்டுமே குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்பொழுது ஆண் குழந்தைகள் உடல் முழுதும் திருநீறு பூசிக்கொண்டு, கையில் பிரம்பு சுற்றிக்கொண்டு, தலையில் பூ சுற்றிக்கொண்டு, குண்டத்தில் இறங்கி நடந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அப்போது சுற்றி இருந்த ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்து அவர்களை உற்சாகப்படுத்தினர். சிறுவர்கள் பயபக்தியுடன் நடந்து சென்று தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்வாறு செய்வதால் சிறுவர்களுக்கு எந்தவித நோய் நொடியின்றி இருப்பார்கள், என்பது ஐதீகம் மேலும் உடல் முழுவதும் சேறு பூசிக் கொண்டு சிறுவர் சிறுமியர்கள் கோவிலை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக தீர்த்தக்குடம் எடுத்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தீர்த்தக்குடம் ஏலம் விடப்பட்டதில்  ஒருவர் இரண்டு லட்சத்திற்கு தீர்த்தக்குடத்தை ஏலம் எடுத்தார்.

அந்த தீர்த்ததின் மூலம் பச்சை தண்ணீரில் விளக்கு எரியும் நிகழ்ச்சியும் மேற்கொள்ளப்பட்டன.  இன்று கம்பம் இடம் நிகழ்ச்சி மற்றும் அவற்றை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளன திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story