மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்


மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்
x
தினத்தந்தி 18 May 2022 4:48 PM GMT (Updated: 18 May 2022 4:48 PM GMT)

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்  என்று பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் வேண்டுகோள் விடுத்தார்.
ஆலோசனை கூட்டம்
பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளையும், மக்கள் நல திட்டங்களையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும்படி ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தொடர் நிகழ்ச்சிகள் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. 
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர்   நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.
மத்திய அரசின் திட்டங்களை கூறுங்கள்
கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது, புதுவை மாநிலத்தில் பிரதமரின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சரிவர தெரியாமல் உள்ளது எனவும், அனைத்து திட்டங்களையும் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் 10 நாட்களை வாய்ப்பாக பயன்படுத்தி நிர்வாகிகள் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் மத்திய அரசின் திட்டங்களையும், புதுவை மாநிலத்தில் பயனடைந்தவர்கள் பட்டியலையும் தயாரித்து மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும்படி நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மோட்டார் சைக்கிள் பேரணி
மாநில       தலைவர்    சாமிநாதன் பேசும்போது, விவசாய அணி, இதர பிற்படுத்தப்பட்டோர் அணி, மகளிர் அணி, இளைஞர் அணி என அனைவரும் பிரதமரின் சாதனைகளை விளக்ககூடிய நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். 
கொரோனா தொற்று காலங்களில் அரசின் செயல்களை தெரிவிக்கக்கூடிய நிகழ்ச்சிகளையும், பிரதமரின் சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இளைஞர் அணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி மாநிலம் முழுவதும் நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு, பொதுச்செயலாளர் மோகன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story