அரியலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் நடந்த 'நீட்' தேர்வை 2,039 பேர் எழுதினர்


அரியலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் நடந்த ‘நீட்' தேர்வை 2,039 பேர் எழுதினர். 39 பேர் தேர்வு எழுதவில்லை.

அரியலூர்

'நீட்' தேர்வு

மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான 'நீட்' தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வு நடத்துவதற்கு 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி கருப்பூரில் உள்ள கீழப்பழுவூர் விநாயகா பப்ளிக் பள்ளியில் 396 மாணவர்களும், 660 மாணவிகளும், அரியலூர் மான்போர்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 231 மாணவர்களும், 441 மாணவிகளும், தாமரைக்குளம் ராம்கோ வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் 97 மாணவர்களும், 253 மாணவிகளும் என மொத்தம் 2,078 பேர் 'நீட்' தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதையொட்டி 3 தேர்வு மையங்களிலும் முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு மாணவ-மாணவிகள் தேர்வு எழுத தயார் நிலையில் இருந்தது. நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5.20 மணி வரை நடந்தது.

2,039 பேர் எழுதினர்

இதில் கீழப்பழுவூர் விநாயகா பப்ளிக் பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த 1,056 போில், 1,038 பேர் தேர்வு எழுதினர். 5 மாணவர்களும், 13 மாணவிகளும் தேர்வு எழுத வரவில்லை. இதேபோல் அரியலூர் மான்போர்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த 672 பேரில், 661 பேர் தேர்வு எழுதினர். 2 மாணவர்களும், 9 மாணவிகளும் தேர்வு எழுத வரவில்லை. தாமரைக்குளம் ராம்கோ வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த 350 பேரில், 340 பேர் தேர்வு எழுதினர். 4 மாணவர்களும், 6 மாணவிகளும் தேர்வு எழுத வரவில்லை.

அரியலூர் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் 'நீட்' தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த மொத்தம் 2,078 பேரில், 2,039 பேர் எழுதினர். 39 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அரைஞாண் கயிறு, தோடு, மூக்குத்தி அகற்றம்

அரியலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் 'நீட்' தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து ஏற்கனவே நுழைவுச்சீட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் மாணவ-மாணவிகள் போதுமான விழிப்புணர்வுடன் அதனை கடைபிடித்து தேர்வு மையங்களுக்கு வந்திருந்ததை காணமுடிந்தது. இதற்கு முன்பு 'நீட்' தேர்வு நடைபெற்ற போது மாணவ-மாணவிகள் சரிவர விதிமுறைகளை கடைபிடிக்காமல் அவசர, அவசரமாக தேர்வு மையங்கள் முன்பு காதணிகள், சங்கிலிகள், ரப்பர் பேண்ட் உள்ளிட்ட அணிகலன்களை கழற்றுவது வாடிக்கையாக இருந்தது. ஆனால் நேற்று அதுபோன்று பெரும்பாலும் இல்லை. ஒரு சில இளைஞர்கள் தங்களது கழுத்துகளில் கட்டப்பட்டிருந்த கயிறுகள் மற்றும் அரைஞாண் கயிறு ஆகியவை கத்திரிகோல் மூலம் அகற்றப்பட்டன. மாணவிகள் தோடு, மூக்குத்தி, கொலுசு, ரப்பர் பேண்ட் உள்ளிட்டவைகளை கழற்றி தங்களது பெற்றோரிடம் கொடுத்தனர். 'நீட்' தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு முககவசம் வழங்கப்பட்டது. மேலும் தேர்வு நடைபெறும் இடங்களில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தன.


Next Story