சென்னையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி 4 பிரிவுகளாக நடைபெற்றது
சென்னையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. 4 பிரிவுகளாக நடைபெற்றது.
மாரத்தான் போட்டி
சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில், நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. இருபாலருக்கான இந்த போட்டியில் முழு மாரத்தான் (42.195 கிலோ மீட்டர்), 'பெர்பெக்ட்' மாரத்தான் (32.186 கிலோ மீட்டர்), அரை மாரத்தான் (21.097 கிலோ மீட்டர்) மற்றும் 10 கிலோ மீட்டர் ஓட்டம் என 4 பிரிவுகளில் நடைபெற்றது.
பெசன்ட் நகர் ஆல்கார்ட் பள்ளி அருகில் தொடங்கப்பட்ட அரை மாரத்தான் போட்டியை அதிகாலை 5 மணிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, இந்திய ஆக்கி முன்னாள் வீரர் பாஸ்கரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அரை மாரத்தான் போட்டியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஓடினார்.
முன்னதாக சென்னை நேப்பியர் பாலத்தில் தொடங்கப்பட்ட முழு மாரத்தான் மற்றும் 'பெர்பெக்ட்' மாரத்தான் போட்டிகளை அதிகாலை 4 மணிக்கு ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தொடங்கி வைத்தார். நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகரில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த மாரத்தான் போட்டிகள் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, சர்தார் பட்டேல் சாலை, ஓ.எம்.ஆர். சாலை, இ.சி.ஆர். சாலை வழியாக கடல்சார் பல்கலைக்கழகம் அருகே நிறைவடைந்தது. 10 கிலோ மீட்டர் தூர ஓட்டம் மட்டும் நேப்பியர் பாலத்தில் இருந்து தரமணி வரை நடைபெற்றது.
20 ஆயிரம் பேர் பங்கேற்பு
சென்னையில் 4 பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தானில் மொத்தம் 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான முழு மாரத்தானில் கோவையை சேர்ந்த வினோத் குமார் முதல் பரிசாக ரூ.1 லட்சத்தை தட்டிச் சென்றார். 2-வது பரிசை கயன் பாபுவும், 3-வது பரிசை ஜெகதீசன் முனுசாமியும் பெற்றனர்.
இதன் பெண்கள் பிரிவில் கென்யா நாட்டை சேர்ந்த பிரிகிட் ஜெரெண்ட் கிமிட்வாய் முதல் பரிசாக ரூ.1 லட்சத்தை பெற்றார். 2-வது பரிசை சந்தியா சங்கரும், 3-வது பரிசை மம்தா ரவாட்டும் பெற்றனர்.
ஆண்களுக்கான 'பெர்பெக்ட்' மாரத்தானில் ஜி.ஜோஸ் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு ரூ.70 ஆயிரம் பரிசாக கிடைத்தது. 2-வது இடத்தை வெங்கடேஷ் பழனிசாமியும், 3-வது இடத்தை சுபம் தீட்ஷி த்தும் பிடித்தனர்.
இதன் பெண்கள் பிரிவில் டிம் டிம் ஷர்மா, முதல் பரிசாக ரூ.70 ஆயிரத்தை தனதாக்கினார். 2-வது பரிசை வினயா மலுசரேயும், 3-வது பரிசை ரமா ரஞ்சனியும் பெற்றனர்.
மொத்தம் ரூ.20 லட்சம் பரிசு
ஆண்களுக்கான அரை மாரத்தானில் மோனு குமார், முதல் இடத்தை பிடித்து ரூ.60 ஆயிரத்தை பரிசாக பெற்றார். 2-வது பரிசை பி.மல்லிகார்ஜுனாவும், 3-வது பரிசை அசோகன் சண்முகமும் பெற்றனர். பெண்கள் பிரிவில் விருஷாலி உட்டேகர் முதல் பரிசான ரூ.60 ஆயிரத்தையும், 2-வது பரிசை ஜெ.ஜெகதீஷ்வரியும், 3-வது பரிசை தரணிதிவ்யா பழனிசாமியும் பெற்றனர்.
ஆண்களுக்கான 10 கிலோ மீட்டர் ஓட்டத்தில் ஆதேஷ் யாதவ் முதல் இடம் பிடித்து, ரூ.40 ஆயிரம் பரிசை பெற்றார். அடுத்த இரு இடங்களை முறையே ரோகித் ரானாவும், சிவா சஞ்சய்யும் பெற்றனர். இதன் பெண்கள் பிரிவில் டி.கஸ்தூரி முதலிடம் பிடித்து ரூ.40 ஆயிரம் பரிசு பெற்றார். 2-வது, 3-வது இடங்களை முறையே தயானா பாஸ்கரனும், பாலா அபிராமியும் பெற்றனர்.
இந்த ஓட்டப்பந்தயங்களில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கான வீல்சேர் ஓட்டப்பந்தயமும் இடம் பெற்றது. 4 பிரிவுகளிலும் மொத்த பரிசுத் தொகையாக ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து பாதிப்பு
இந்த மாரத்தான் போட்டியால் பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் இணைப்பு செம்மொழி சாலை பகுதியில் ஒரு சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பள்ளிக்கரணை-ரேடியல் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.
அதேபோல் ஓ.எம்.ஆர்.சாலையில் இருந்து இ.சி.ஆர். சாலைக்கு செல்லக்கூடிய கே.கே.சாலையில் வாகனங்களை இயக்காமல் சோழிங்கநல்லூர் ஆவின் பகுதி சிக்னலில் திருப்பி விடப்பட்டது.