21-ந்தேதி கொரோனா மெகா தடுப்பூசி முகாம்: சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் நடக்கிறது


21-ந்தேதி கொரோனா மெகா தடுப்பூசி முகாம்: சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் நடக்கிறது
x

சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் வருகிற 21-ந்தேதி 34-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது பேரியக்கமாக நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் 33 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

சென்னையில் நடைபெற்ற 33 தடுப்பூசி முகாம்களில் இதுவரை 41 லட்சத்து 26 ஆயிரத்து 183 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கையிருப்பு

இதனைத்தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 34-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 200 வார்டுகளில் 2 ஆயிரம் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக ஆயிரம் சுகாதார குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 84 ஆயிரத்து 810 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 2 லட்சத்து 56 ஆயிரத்து 270 கோவேக்சின் தடுப்பூசிகள் மற்றும் 72 ஆயிரத்து 900 கார்பெவேக்ஸ் தடுப்பூசிகள் என மொத்தம் 4 லட்சத்து 13 ஆயிரத்து 980 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

முன்னெச்சரிக்கை தவணை

சென்னையில் இதுவரை 43 லட்சத்து 5 ஆயிரத்து 346 பேர் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்களாக உள்ளனர். இவர்களில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 124 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும்.

எனவே, முதல் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டியவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தவேண்டியவர்களும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் 21-ந்தேதியன்று நடைபெற உள்ள மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story