ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 21 பேர் காயம்


ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 21 பேர் காயம்
x

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 21 பேர் காயமடைந்தனர்.

திருச்சி

மணப்பாறை:

ஜல்லிக்கட்டு

மணப்பாறை அருகே உள்ள முத்தபுடையான்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் முதலில் கோவில் காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்தும், துள்ளிக்குதித்தும் வந்த காளைகள், அடக்க வந்த வீரர்களை அருகில் கூட நெருங்கவிடாமல் ஆக்ரோஷம் காட்டின. அருகில் நெருங்கிய வீரர்களை சில காளைகள் முட்டித்தூக்கி வீசி, பந்தாடின. இருப்பினும் வீரர்கள் காளைகளுடன் மல்லுக்கட்டி, திமிலை இறுகப்பற்றி காளைகளை அடக்கினர்.

21 பேர் காயம்

இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள், கிப்ட் பாக்ஸ் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 669 காளைகள் மற்றும் 267 வீரர்கள் களம் கண்டனர். காளைகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story