சென்னை விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் தங்கம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.21 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷேக் முகமது (வயது 27) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.11 லட்சத்து 47 ஆயிரம் மதிப்புள்ள 260 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

அதேபோல் துபாயில் இருந்து மற்றொரு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த ஜாவித் அலி (30) என்பவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.9 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 223 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.22 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள 483 கிராம் தங்கம் மற்றும் வௌிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஷேக் முகமது, ஜாவித் அலி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story