காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்


காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்
x

விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில், மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழாவிற்கு முன்பு ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. காலை 9.40 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை.

அதனை தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 377 காளைகள் வரிசையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை 157 மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் துள்ளிக்குதித்து ஓடியது.

21 பேர் காயம்

காளைகள் முட்டியதில் 21 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 4 காளைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவற்றிற்கும் வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த கால்நடை மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பரிசு

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், எல்.இ.டி. டி.வி., மின் விசிறி, சில்வர் அண்டா, வெள்ளி நாணயங்கள் மற்றும் ரொக்கம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டை விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பார்வையாளர்கள் ஏமாற்றம்

ஜல்லிக்கட்டில் பங்கேற்ற சுமார் 750-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்திருந்த நிலையில் மதியம் 1.15 மணியளவில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நிறுத்தப்படுவதாக அறிவித்தனர். இதனால் 377 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டு மழையால் பாதியில் நிறுத்தப்பட்டதால் காளையின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் ஏமாற்றமடைந்தனர். மழை நின்ற உடனே ஜல்லிக்கட்டு தொடங்கும் என்று பார்வையாளர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் ஜல்லிக்கட்டு திடலில் மழை நீர் சூழ்ந்திருந்ததால் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பார்வையாளர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story