கூட்டுறவு துறை மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 21 ஆயிரம் கோடி கடன் உதவி - அமைச்சர் பெரியகருப்பன்


கூட்டுறவு துறை மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 21 ஆயிரம் கோடி கடன் உதவி - அமைச்சர் பெரியகருப்பன்
x

கூட்டுறவு துறை மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 21 ஆயிரம் கோடி கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டுறவு துறையின் கீழ் சென்னை மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு புதிய வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெரம்பூர் ஆர்.மகேஷ் தலைமையில் நடைபெற்றது.

நிர்வாக இயக்குனர் அமல தாஸ் வரவேற்றுப் பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார்கள்.

விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தார். அதன் பேரில் முதல்-அமைச்சர் அதற்கென ஒரு தொகையை ஒதுக்கீடு செய்து தற்பொழுது அதை நடைமுறைப்படுத்தி வருகிறார். 251 குழுக்களுக்கு 4.98 கோடி வாரி வழங்கி மகளிரின் இன்னலை போக்கியவர் நமது முதல்வர்.

கடன் தள்ளுபடி பெற்றவர்கள் தொழில் செய்வதற்கு உதவியாக வருமுன் காப்போம் என்கின்ற வாசகத்திற்கு இணங்க 18 குழுக்களுக்கு 1.21 கோடி கடன் உதவியாக தந்திருப்பவர் நமது முதல்வர்.

பொதுமக்கள், தொழில் முனைவோர் அதிக வளர்ச்சி பெற வேண்டும் என்கின்ற நோக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் 452 பேருக்கு 3.18 கோடியை அவர்களது வாழ் வாதாரத்திற்காக கடனாக வழங்கக் கூடிய முதல்வர் நமது முதல்வர்.

கூட்டுறவுத் துறையைப் பொறுத்தவரையில் பயிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, உட்பட அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யக் கூடிய ஒரே துறை நமது அரசின் கூட்டுறவு துறை தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

கலைஞர் முதலமைச்சராக இருந்த பொழுது இந்து சமய அறநிலையத்துறை எனக்கு வழங்கப்பட்டது. ஆனால் நமது முதல்-அமைச்சர் பதவி ஏற்றதும் இந்து சமய அறநிலையத் துறையை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு வழங்கினார். அவர் அந்தத் துறையில் என்னை விட கூடுதலாக மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

மகளிர் சுய உதவிக் குழு என்கின்ற ஒன்றிற்கு விதை விதைத்தவர் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான். தமிழகத்தில் சிறிய அளவில் தொடங்கி பெரிய அளவில் மகளிர் சுய உதவி குழு வளர்ச்சி அடைய செய்தனர். மறைந்த நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான் காரணம். இன்றைய காலகட்டத்தில் அது மிக பெரிய அளவில் வருவதற்கு நமது முதல்-அமைச்சர் தான் காரணம்.

ஏனெனில் நமது முதலமைச்சர் அப்பொழுது அமைச்சராக இருந்த போது தான் மகளிர் சுய உதவிக் குழு மிகப்பெரிய விஸ்வரூபத்தை எடுத்தது. அன்று மகளிர் சுய உதவி குழுக்களை ஊக்கப்படுத்தி திறன் பட செயலாற்றியவர் தான் நமது முதல்-அமைச்சர். நமது முதல்-அமைச்சர் மகளிர்களின் பொருளாதாரம் உயர்வதற்கு 20 ஆயிரம் கோடி வரை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்தார்.

ஆனால் நிர்ணயம் செய்யப்பட்ட அளவைவிட கூடுதலாக கடந்த 2022 -ம் ஆண்டு 21 ஆயிரம் கோடி கடன் தொகையாக வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. தற்போது இந்த துறை நமது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நமது முதல்-அமைச்சர் போல் மிகவும் சிறப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

ஆண்களுக்கு நிகராக பெண்களும் முன்னேற வேண்டும் என்று எண்ணுபவர் நமது முதல்-அமைச்சர். அதுமட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் விவசாய கடன் வெறும் ரூ.6000 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நமது முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல் இன்னும் சில தினங்களில் விவசாயிகளுக்கான கடன் தொகையின் அளவு ரூ.12 ஆயிரம் கோடியை எட்ட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.


Next Story