விழுப்புரம் மாவட்டத்தில் 21,857 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்


விழுப்புரம் மாவட்டத்தில் 21,857 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த தேர்வை 21 ஆயிரத்து 857 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்

விழுப்புரம்

விழுப்புரம்

பிளஸ்-1 பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 47 தேர்வு மையங்களிலும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களிலும் என 101 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 193 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 557 மாணவர்களும், 11 ஆயிரத்து 300 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 857 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

பறக்கும் படைகள்

இந்த தேர்வு பணிகளில் 32 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 105 முதன்மை கண்காணிப்பாளர்கள், 105 துறை அலுவலர்கள், 28 வழித்தட அலுவலர்கள், 1,737 அறை கண்காணிப்பாளர்கள், சொல்வதை எழுத 387 பேர், அலுவலக பணியாளர்கள் 205 பேர் என மொத்தம் 2,599 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வின்போது மாணவர்கள் ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாத வண்ணம் இருக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் 115 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் காவல் துறையின் மூலம் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தடையற்ற மின்சார வசதிகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வினாத்தாள் அறைக்கு பாதுகாப்பு

இந்த தேர்வையொட்டி சென்னை அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்தில் இருந்து வினாத்தாள்கள் பெறப்பட்டு அவை விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலகம், அரகண்டநல்லூர் லட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செஞ்சி அல்ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வானூரை அடுத்த திருச்சிற்றம்பலம் டி.எம்.ஐ. செயிண்ட்ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

1 More update

Next Story