உர விற்பனையில் ரூ.22 லட்சம் கையாடல்
திருச்செங்கோடு அருகே உள்ள கொக்கராயன்பேட்டையில் உர விற்பனையில் ரூ.21 லட்சத்து 91 ஆயிரம் கையாடல் செய்த வழக்கில் நாமக்கல்லை சேர்ந்த பட்டதாரி வாலிபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
உழவர் உர கூட்டுறவு நிறுவனம்
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) கிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு தேவையான முக்கிய இடுபொருட்களான உரம், பூச்சிமருந்து, களைக்கொல்லி மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை இப்கோ இ-பசார் என்னும் துணை நிறுவனம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் ஒரு மையத்தை நிறுவி, விவசாயிகளுக்கு அரசாங்கம் நிர்ணயித்த விலையில் விற்பனை செய்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கொக்கராயன் பேட்டையில் செயல்பட்டு வரும் கிளையில் நாமக்கல்லை சேர்ந்த முதுநிலை வேளாண் பட்டதாரி சீனிவாசு (வயது 30) விற்பனையாளராக கடந்த 2018-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி திடீரென தனது பணியை ராஜினாமா செய்வதாக தலைமை அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த தலைமை அலுவலக அதிகாரிகள் கொக்கராயன்பேட்டை அலுவலகத்திற்கு வந்து தணிக்கை மேற்கொண்டனர்.
உரம் இருப்பு குறைவு
இந்த தணிக்கையின் போது ரூ.30 லட்சத்து 3 ஆயிரத்து 678-க்கு உரம் இருப்பு குறைவாக இருப்பது தெரியவந்தது. அப்போது சீனிவாசு, கரும்பு விவசாயிகள் உரத்தை கடனாக பெற்று சென்று இருப்பதாகவும், விரைவில் விவசாயிகளிடம் வசூல் செய்து கம்பெனிக்கு பணத்தை செலுத்தி விடுவதாகவும் கூறினார்.
ஆனால் கொஞ்சம் பணத்தை மட்டும் செலுத்திய அவர், மீதமுள்ள பணத்தை செலுத்தாமல் மோசடி செய்யும் நோக்கில் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
ரூ.21.91 லட்சம் கையாடல்
இதற்கிடையே அந்த நிறுவனத்தின் மாநில அலுவலர் புன்னம் ராஜீ, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் சீனிவாசு, உர விற்பனையில் சுமார் ரூ.21 லட்சத்து 91 ஆயிரத்தை கையாடல் செய்து விட்டதாக கூறி இருந்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமணன், இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி ஆகியோர் சீனிவாசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.