மணல் குவாரியை முற்றுகையிட்ட 22 பேர் கைது
பெண்ணாடம் அருகே மணல்குவாரியை முற்றுகையிட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம்:
பெண்ணாடம் அருகே இறையூர், அரியலூர் மாவட்டம் த.கூடலூர் ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ள வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க மணல் குவாரியை உடனே மூடஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த த.கூடலூர் மற்றும் இறையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று வெள்ளாற்றில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் மணல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் மணல் ஏற்றி சென்ற லாரியை சிறை பிடிக்க முயன்றனர். இது குறித்த தகவலின் பேரில் தளவாய் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.