ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 2,222 வாக்குச்சாவடிகள்- வரைவு வாக்குப்பதிவு மைய பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
ஈரோடு மாவட்டத்தில் வரைவு வாக்குப்பதிவு மைய பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். மொத்தம் 8 தொகுதிகளில் 2,222 வாக்குச்சாவடிகள் உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் வரைவு வாக்குப்பதிவு மைய பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். மொத்தம் 8 தொகுதிகளில் 2,222 வாக்குச்சாவடிகள் உள்ளன.
கலெக்டர் வெளியிட்டார்
வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்தம் பணிகள் தொடங்குவதற்கு முன்பு வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பட்டியலை வெளியிட ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் து.சந்திரசேகரன், திருச்செல்வம், விஜயபாஸ்கர், சோழா லோகநாதன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
2,222 வாக்குச்சாவடிகள்
பின்னர் பேசிய கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 951 இடங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளது. தற்போது வாக்குப்பதிவு மையங்கள் அமைந்து உள்ள கட்டிடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடி கட்டிடங்கள் பழுதடைந்து இருந்தால் அது கண்டறியப்பட்டு இடிக்கவும், அதற்கு பதிலாக வேறு கட்டிடங்களில் வாக்குப்பதிவு அறையை மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே கட்சிகளின் பிரதிநிதிகளும், அவரவர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் தொடர்பான கருத்துகளை எழுத்துமூலமாக தெரிவிக்கலாம்.
புதிய மையங்கள்
இதுபோல் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 2 ஆக பிரித்து புதிய வாக்குப்பதிவு மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதுதொடர்பாகவும் கட்சிகளின் பிரதிநிதிகள் எழுத்துப்பூர்வமாக 7 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். ஏற்கனவே வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, கூடுதல் வாக்குப்பதிவு மையங்கள் அமைத்தலுக்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்படும்போது மின்சாரம், குடிநீர், கழிப்பிடம், சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த பணிகள் 28-ந் தேதிக்குள் முடிக்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும். இந்த பணிக்கு கட்சி பிரதிநிதிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறினார்.
கோரிக்கை
கூட்டத்தில் பேசிய கட்சி பிரதிநிதிகள் பலரும், 'இறந்து போன வாக்காளர்கள், இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் பல ஆண்டுகளாக பட்டியலில் உள்ளது. இதை எடுக்க படிவம்-7 வழங்க வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அதை கொடுக்காததால் இதுபோன்ற பெயர்கள் ஏராளமாக உள்ளன. எனவே இறந்தவர்கள் பெயர்களை இறப்பு சான்றிதழ் மூலமாக பட்டியலில் இருந்து எடுக்கவும், புலம் பெயர்ந்தவர்கள் பெயரை எடுக்க படிவம் 7 வழங்க எளிய நடைமுறைகளையும் ஏற்படுத்த வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர்.
நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கர், ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.