சமையல் எண்ணெய் இறக்குமதி 23 சதவீதம் அதிகரிப்பு


சமையல் எண்ணெய் இறக்குமதி 23 சதவீதம் அதிகரிப்பு
x

சமையல் எண்ணெய் இறக்குமதி 23 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது.

விருதுநகர்

கடந்த செப்டம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை சமையல் எண்ணெய் இறக்குமதி 23 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் அதில் பாமாயில் மட்டும் 69 சதவீத பங்கு வகிக்கிறது.

அதிகரிப்பு

மத்திய அரசு உள்நாட்டு சமையல் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய பாமாயில், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் வகைகளை இந்தோனேசியா, மலேசியா, அர்ஜென்டினா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. செப்டம்பர் 2022 தொடங்கி மார்ச் 2023 வரை 6 மாத காலத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது.

கடந்த நவம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை சமையல் எண்ணெய் 6.98 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 5.64 மில்லியன் டன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் உணவு பயன்பாட்டிற்கு அல்லாத எண்ணெய் வகைகள் 79,888 லட்சம் டன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது.

சமையல் எண்ணெய்

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.52 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் மட்டும் சமையல் எண்ணெய் இறக்குமதி 1.15 மில்லியன் டன் ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 1.05 மில்லியன் டன்னாக இருந்தது.

உணவு பயன்பாட்டிற்கு அல்லாத எண்ணெய் வகைகள் 36,693 லட்சம் டன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு 52,882 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. மார்ச் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் வகைகளில் பாமாயில் மட்டும் 24 சதவீதம் அதிகரித்த நிலையில் 7.2 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. கடந்தாண்டு இதே மாதத்தில் 5.85 லட்சம் டன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் சோயாபீன் எண்ணெய் 27 சதவீதம் குறைவாக 2.59 லட்சம் டன்னும், சூரியகாந்தி எண்ணெய் 5 சதவீதம் குறைவாக 1.48 லட்சம் டன்னும் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

இறக்குமதி வரி உயர்வு

இறக்குமதி செய்யப்படும் பாமாயிலில் 69 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலாக இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டில் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே மத்திய அரசு சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு தற்போது விதிக்கப்படும் 7.5 சதவீத இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயர்த்த வேண்டுமென சமையல்எண்ணெய் சுத்தி கரிப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளதாக சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story