ரூ.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகள்
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டிட பணிகளை மத்திய மந்திரி வி.கே.சிங் ஆய்வு செய்தார்.
இடவசதி இல்லை
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் போதிய இடவசதிகள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர். கொரோனா காலங்களில் நோயாளிகள் பந்தல் அமைத்து அதில் தங்க வைத்து டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதனால் மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசு சுகாதார நிதியின் கீழ் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடி மதிப்பில் 6 தளங்களை கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மத்திய மந்திரி வி.கே.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தரமாக கட்ட வேண்டும்
பின்னர் அவர் கூறுகையில், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் அரசு மருத்துவமனை வளாகத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனையில் பொதுமக்கள் பயனடையும் வகையில் ஆண் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக ஐ.சி.யு. வார்டு மற்றும் லேப் வசதிகள், போதிய அளவிலான மருந்தகங்களும் அமைக்கப்படுகிறது. மேலும் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் அறைகள் அமைக்கப்பட உள்ளது.
இங்கு நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். அதே நேரத்தில் தரமாக கட்ட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
ஆய்வின்போது, தலைமை மருத்துவர் சிவசுப்பிரமணியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.