65 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை


65 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை
x

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் 24 மணிநேரமும் குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டத்தில் மேயர் அன்பழகன் கூறினார்.

திருச்சி

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் 24 மணிநேரமும் குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டத்தில் மேயர் அன்பழகன் கூறினார்.

பட்ஜெட் விவாத கூட்டம்

திருச்சி மாநகராட்சி 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 29-ந் தேதி மாநகராட்சி கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா, ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

மேயர் அன்பழகன்:- இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் அமையப்பெற்றுள்ளது. இதற்கு நிதி ஒதுக்கிய தமிழக முதல்-அமைச்சருக்கும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த பட்ஜெட் மீதான நிறை, குறைகளை கவுன்சிலர்கள் எடுத்து கூறினால் வருங்காலங்களில் அவை சரி செய்யப்படும்.

ரேஷன் கடை

17-வது வார்டு ந.பிரபாகரன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) :- இந்த பட்ஜெட்டில்அனைத்து அரசு அலுவலக கட்டிடம், மெட்ரோ ரெயில் திட்டம், ஒருங்கிணைந்த பஸ் நிலையம் என பல்வேறு திட்டங்களை வழங்க காரணமான முதல்-அமைச்சருக்கும், அமைச்சருக்கும், மேயர், ஆணையருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது வார்டில் புதிதாக ரேஷன்கடை கட்டி தர வேண்டும்.

காந்திமார்க்கெட் அருகே மீன்சந்தை, ஆட்டிறைச்சி கூடத்தில் இருந்து வரும் கழிவுகள் எனது வார்டுக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 60 சதவீதம் ஏழை, எளிய மக்கள் வசிக்கக்கூடிய பகுதியாக உள்ள எனது வார்டில் சமுதாயக்கூடம் கட்டி தர வேண்டும்.

அம்மா உணவகம்

28-வது வார்டு பைஸ்அகமது (ம.ம.க.) :- கர்ப்பிணி பெண்களுக்கு அரசு வழங்கும் நிதிஉதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அந்த தொகை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

65-வது வார்டு அம்பிகாபதி (அ.தி.மு.க.) :- எனது வார்டில் அதிக அளவு வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. அம்மா உணவகத்துக்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இன்னும் விரிவாக்கம் செய்ய கூடுதலாக நிதி ஒதுக்கி இருக்க வேண்டும்.

மேயர்:- கடந்த ஆட்சியிலும் இதேபோல் ரூ.3 கோடி தான் நிதி ஒதுக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காக அந்த திட்டத்தை முடக்க நினைக்கமாட்டோம்.

47-வது வார்டு செந்தில்நாதன் (அ.ம.மு.க.):-

அரசு சார்பில் நடத்தப்படும் பொது நிகழ்ச்சிகளுக்கு மாநகராட்சி நிதி அதிகஅளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர்த்து அந்தந்த துறை நிதியை பயன்படுத்த வேண்டும். மேலும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேம்பாலங்களுக்கு அடியில் இருட்டாக இருந்தது. எங்கள் கோரிக்கையை ஏற்று, மேம்பாலங்களுக்கு அடியில் விளக்கு அமைத்து கொடுத்ததற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆனால் அரிஸ்டோ மேம்பாலம் அடியில் நீலநிற விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இது சில சமயத்தில் மங்கலாக தெரிகிறது. எனவே அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளை மேம்பாலங்களுக்கு அடியில் பொருத்த வேண்டும்.

பள்ளிக்கட்டிடம்

20-வது வார்டு எல்.ஐ.சி.சங்கர் (சுயே) :-

புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கே அதிக நிதிகள் ஒதுக்கப்படுகிறது. பழைய மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். எனது வார்டில் பூமிக்கு அடியில் மின்சார வயர்கள் செல்லும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்த வேண்டும்.

39-வது வார்டு ரெக்ஸ் (காங்.) :- பாத்திமாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஆகவே அங்கு பள்ளி கட்டிடம் கட்டி தர வேண்டும். எனது வார்டில் ஏழை, எளிய மக்கள் வசிக்கிற பாப்பாக்குறிச்சி, எல்லக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சமுதாயக்கூடம் கட்டி தர வேண்டும்.

24 மணி நேரமும் குடிநீர்

மேயர் அன்பழகன்:- கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு 858 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால் வெறும் 100 கி.மீ. தூரம் கூட சாலை அமைக்கப்படவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு, ஓராண்டில் 300 கி.மீ.தூரம் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 51-வது வார்டில் இருந்து 57-வது வார்டு வரை 7 வார்டுகளுக்கு சோதனை அடிப்படையில் 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை 3 மாதம் நிறைவேற்றி ஆய்வு செய்தபிறகு, விரைவில் 65வார்டுகளுக்கும் 24 மணிநேரமும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் வரும் குடிநீர் குழாயில் மீட்டர் பொருத்தப்பட்டு அனைவருக்கும் சமமான முறையில் 24 மணிநேரமும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்தாண்டிலேயே அனைத்து வார்டுகளிலும் அலுவலக கட்டிடம் கட்டப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story