அரசு நடுநிலைப்பள்ளிக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பு
அரசு நடுநிலைப்பள்ளிக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பு
அருள்புரம்,
திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3 மற்றும் 4-ம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழி கல்வியை 126 மாணவ-மாணவிகள் ஒரே வகுப்பறையில் படித்து வருகின்றனர். இந்த வகுப்பறை கட்டிடம் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சீரமைக்கப்பட்டது.
அதற்கு பிறகு வகுப்பறையில் மின்விசிறிகள் மற்றும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் மின் இணைப்பு கொடுக்காமல் இருந்தது. இதனால் மாணவ -மாணவிகளுக்கு போதிய காற்றோட்டமும், வெளிச்சமும் இல்லாததால் மாணவ-மாணவிகள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.
இது குறித்து 'தினத்தந்தி'யில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து அந்த பள்ளிக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார். அதன்படி பல்லடம் வட்டார வளர்ச்சி அதிகாரி மனோகரன் தலைமையிலான குழுவினர் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்து மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்ெகாண்டனர். அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 24 மணி நேரத்தில் பள்ளிக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
இந்த பள்ளிக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' ஆகியோருக்கும் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ-மாணவிகள், மக்கள் பிரதிநிதிகளும் நன்றி தெரிவித்தனர்.