24 மணி நேரம் குடிநீர் வினியோக திட்ட குழாய் பதிப்பு பணி


24 மணி நேரம் குடிநீர் வினியோக திட்ட குழாய் பதிப்பு பணி
x

24 மணி நேரம் குடிநீர் வினியோக திட்ட குழாய் பதிப்பு பணி எம்.எல்.ஏ.,மேயர் தொடங்கி வைத்தனர்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 20,30,44,51 ஆகிய வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் வினியோகம் செய்யும் திட்டத்தின் குழாய் பதிப்பு பணிகளை க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

24 மணி நேர குடிநீர் வினியோகம்

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120½ கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான வார்டுகளில் குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளுக்கு ஏற்றி சராசரியாக 4 நாட்கள் இடைவெளியில் வினியோகம் நடந்து வருகிறது. இந்த நிலையில் 20,30,44, 51 ஆகிய 4 வார்டுகளில் மட்டும் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டப்பணிகள் முதல்கட்டமாக தொடங்கப்படும் என்று மேயர் தினேஷ்குமார் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளின் குழாய் பதிக்கும் பணி பூமிபூஜை தொடக்க விழா நேற்று காலை 51-வது வார்டில் ஷெரீப் காலனியில் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பணிகளை தொடங்கி வைத்தனர்.

கோவில்வழி பஸ் நிலையம்

குழாய் பதிப்பு மற்றும் இணைப்பு, குடிநீரை அளவீடு செய்யும் ஸ்கேடா கருவிகள் பொருத்துதல், மேல்நிலைத்தொட்டிகளில் தானியங்கி கருவிகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. பணிகள் முடிந்ததும் விரைவில் 24 மணி நேர குடிநீர் வினியோகம் தொடங்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்பிறகு படிப்படியாக அனைத்து வார்டுகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து திருப்பூர் தாராபுரம் ரோடு கோவில்வழி பஸ் நிலையத்தில் ரூ.26 கோடியில் நடந்து வரும் கட்டுமான பணிகளை மேயர் ஆய்வு செய்தார். பின்னர் வெள்ளியங்காடு 60 அடி ரோட்டில் சாலை அமைக்கும் பணிகளை மேயர், துணை மேயர், ஆணையாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.




Next Story