ரூ.24½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

வால்பாறையில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், ரூ.24½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.
வால்பாறை
வால்பாறையில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், ரூ.24½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.
மக்கள் தொடர்பு முகாம்
வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதற்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா முன்னிலை வகித்தார். தாசில்தார் ஜோதிபாசு வரவேற்றார். கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி பேசியதாவது:-
வால்பாறையில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வு எழுதாதவர்களை கண்டறிந்து மீண்டும் பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்படும். சத்துணவு மையம் மூலம் உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். மேலும் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வன உரிமை சான்று
இதையடுத்து 2 பேருக்கு விபத்து நிவாரணம், 3 பேருக்கு பழங்குடியினர் சான்றிதழ், நகராட்சி நிர்வாகம் சார்பில் 6 பேருக்கு தனிநபர் கடன், தெருவோர வியாபாரிகள் 10 பேருக்கு அடையாள அட்டை, 8 பேருக்கு தையல் எந்திரம், 4 பேருக்கு வேளாண் இடுபொருள், 11 பேருக்கு குடும்ப அட்டை, 58 பேருக்கு முதியோர் மற்றும் மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட 133 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 59 ஆயிரத்து 745 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும் தமிழகத்திலேயே முதல் முறையாக பாலகிணாறு, நெடுங்குன்று, சிங்கோனா, தெப்பக்குளமேடு, உடுமன்பாறை, சங்கரன்குடி, பரமன்கடவு ஆகிய 7 மலைவாழ் கிராமங்களை சேர்ந்த 602 பேர் பயன் பெறும் வகையில் வன உரிமை பயன்பாட்டு ஆவண சான்றுகள் வழங்கப்பட்டது.
கண்காட்சி அரங்கு
முன்னதாக அனைத்து துறை அதிகாரிகள் அரசு நலத்திட்டங்களை பெறுவது குறித்து விளக்கினர்கள். மேலும் தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்கை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதில் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார், தி.மு.க. நகர செயலாளர் சுதாகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் படகு இல்லத்தை கலெக்டர் பார்வையிட்டு, விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். சேடல்டேம் பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ள இடங்களையும் ஆய்வு செய்தார்.






