6 பேரிடம் 24 பவுன் நகை பறிப்பு
மதுரை சித்திரை திருவிழா கூட்ட நெரிசலை பயன்படுத்தி 6 பேரிடம் 24 பவுன் நகை பறிக்கப்பட்டது.
மதுரை சித்திரை திருவிழா கூட்ட நெரிசலை பயன்படுத்தி 6 பேரிடம் 24 பவுன் நகை பறிக்கப்பட்டது.
சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அதை காண்பதற்காக 4-ந்தேதி இரவு முதலே பக்தர்கள் வைகையாற்று பகுதியில் குவிந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடியதால் அதனை பயன்படுத்தி சில இடங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தேனி மாவட்டம் அல்லி நகரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60). அவர் மதிச்சியம் ஷா தியேட்டர் அருகே நின்றிருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் அணிந்திருந்த 5½ பவுன் தங்கசங்கிலியை மர்ம நபர் திருடிச்சென்று விட்டார்.
மதுரை விக்கிரமங்கலம் கோவில்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (57). இவர் குடும்பத்துடன் சித்திரை திருவிழா காண வந்திருந்தார். திருவிழா கூட்டத்தில் அவர் அணிந்தி ருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் பறித்துச் சென்று விட்டார்.
மதுரை மதிச்சியம் சப்பானி கோவில் தெருவை சேர்ந்தவர் மருதவள்ளி (60). இவர் வைகை வடகரை பகுதியில் திருவிழா கூட்டத்தில் நின்றார். அப்போது அவர் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் திருடிச்சென்று விட்டார்.
நகை பறிப்பு
மதுரை சின்ன சொக்கிகுளம் ஜவஹர்ரோட்டை சேர்ந்தவர் மங்கம்மாள் (72). இவர் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை மர்ம நபர் திருடிவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அழவாக்கரைவாடியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (67). இவர் வைகையாற்றில் பக்தர்கள் கூட்டத்தில் நின்றிருந்த போது அவர் அணிந்திருந்த 3¾ பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர் திருடிச்சென்று விட்டார்.
ராமநாதபுரம் புத்தேந்தலை சேர்ந்தவர் தங்கவேல் மகன் பூபதி (32). இவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம ஆசாமி பறித்துச் சென்று விட்டான்.
இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மதிச்சியம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சித்திரை திருவிழா கூட்டத்தில் பக்தர்களிடம் 24 பவுன் நகை பறித்த திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.