அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 24 பாம்புகள் பிடிபட்டன


அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 24 பாம்புகள் பிடிபட்டன
x

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 24 பாம்புகள் பிடிபட்டன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நகரின் மையப்பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் அமைந்த இந்த பணிமனை வளாகத்தில் பழைய டயர்கள், டியூப்கள் அகற்றப்படாததால், அங்கு மழைநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் பணிமனையில் குவிந்து கிடக்கும் பழைய டயர்களுக்கு இடையே விஷ பாம்புகள் நடமாடுவதாக, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கிளை மேலாளரிடம் முறையிட்டு மனு வழங்கினர்.

24 பாம்புகள் பிடிபட்டன

இதையடுத்து நெல்லை பேட்டை, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாம்பாட்டிகள் 4 பேர் நேற்று ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள், பணிமனை வளாகத்தில் இருந்த பாம்புகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பாம்பாட்டிகள் மகுடி ஊதியதும் பணிமனை வளாகத்தில் பழைய டயர்கள் வைக்கப்பட்ட இடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாம்புகள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன. அவற்றை பாம்பாட்டிகள் லாவகமாக பிடித்து சாக்குப்பைகளில் போட்டனர். கொடிய விஷமுடைய நல்லபாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட 24 பாம்புகள் பிடிபட்டன.

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 24 பாம்புகள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story