சாலையில் சுற்றித்திரிந்த 24 தெருநாய்கள் பிடிபட்டன
நெல்லையில் சாலையில் சுற்றித்திரிந்த 24 தெருநாய்கள் பிடிபட்டன.
நெல்லை மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் பொதுமக்களை விரட்டி கடித்து குதறுகின்றன. இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை வண்ணார்பேட்டை, மேலப்பாளையம், சாலைத்தெரு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி பகுதியிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. ஆஸ்பத்திரியின் பிரசவ வார்டு, எலும்பு முறிவு பிரிவு வார்டு பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் அங்கு சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இதையடுத்து நெல்லை மாநகரப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிப்பதற்கு ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். அதன்பேரில் நெல்லை வண்ணார்பேட்டை சாலைத்தெரு, மணிமேகலை தெரு, பேராச்சியம்மன் கோவில் தெரு, ராமலிங்க தெரு, பாலாஜி நகர் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 24 தெருநாய்களை பிடித்து அறுவை சிகிச்சைக்காக வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த பணியில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கரநாராயணன், சுப்பிரமணி, மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.