அரவை மில்லில் பதுக்கிய 2.4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சேலம் அருகே அரவை மில்லில் பதுக்கிய 2.4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கோழித்தீவனம் தயாரிக்க ரேஷன் அரிசியை பதுக்கியவர் மீது வழக்கு பாய்ந்தது.
சேலம் அருகே அரவை மில்லில் பதுக்கிய 2.4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கோழித்தீவனம் தயாரிக்க ரேஷன் அரிசியை பதுக்கியவர் மீது வழக்கு பாய்ந்தது.
கோழிப்பண்ணை
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் ஜெயமுருகன் என்பவருக்கு சொந்தமாக கோழிப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில், பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடையில் வினியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக பறக்கும்படை தனி தாசில்தார் ராஜேஷ்குமார் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட ஜெயமுருகனின் கோழிப்பண்ணைக்கு சென்று திடீரென சோதனை நடத்தினர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
அப்போது, அங்குள்ள அரவை மில்லில் மூட்டை, மூட்டையாக 2 ஆயிரத்து 400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது குறித்து கோழிப்பண்ணை உரிமையாளர் ஜெயமுருகனிடம் விசாரணை நடத்தினர். கோழிகளுக்கு தீவனமாக அரைத்து வழங்க ரேஷன் அரிசியை முறைகேடாக கொண்டு வந்து கோழிப்பண்ணையில் உள்ள அரவை மில்லில் ஜெயமுருகன் சேமித்து வைத்திருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் ஜெயமுருகனை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் ஜெயமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.