செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்


செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
x

நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாட்டில் அனைத்து வேலைகளும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்று வலியிறுத்தி திருப்பூரில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை 2½ மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாட்டில் அனைத்து வேலைகளும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்று வலியிறுத்தி திருப்பூரில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை 2½ மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

செல்கோபுரத்தில் ஏறிய வாலிபர்

திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்த ஆத்துப்பாளையம் சவுபாக்யாநகர் பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சிவா (வயது 25). பனியன் பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை 4 மணிக்கு அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி உச்சிக்கு சென்றார். பின்னர் உச்சியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார், 15 வேலம்பாளையம் போலீசார் மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் சுப்பையா தலைமையில் ஏராளமான தீயணைப்புத்துறை வீரர்களும் அங்கு விரைந்து வந்து சிவாவிடம் கீழே இறங்கி வருமாறு கூறினர்.. ஆனால் அவர் இறங்கி வர மறுத்து விட்டார். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் கோபுரம் மீது ஏறி சிவா அருகே சென்றனர்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையில் போலீசார் சிவாவின் தாய் மீனாட்சி, நண்பர் நாகராஜ், அனுப்பர்பாளையம் பாத்திர சங்க துணைத்தலைவர் குணசேகரன், முன்னாள் கவுன்சிலர் கோட்டபாலு ஆகியோரை வைத்து ஒலிபெருக்கி மூலமாக சிவாவை கீழே இறங்கி வருமாறு பேச வைத்தனர். ஆனால் சிவா பிடிவாதமாக மேலேயே இருந்து கொண்டு தமிழகத்தில் அனைத்து வேலைகளும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கையை தூக்கியபடி கோஷம் எழுப்பினார்.

சிவாவிடம் பேச்சுக் கொடுத்தபடியே தீயணைப்புத்துறையினர் சிவாவை மடக்கிப் பிடித்து கயிறால் கட்டி கீழே இறக்கினார்கள். உடனடியாக அவரை போலீசார் ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிவா குடிபோதையில் செல்போன் கோபுரம் மீது ஏறி மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. முன்னதாக செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சிவாவை பார்ப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2½ மணி நேரம் போராடி அவரை பாதுகாப்பாக கீழே இறக்கிய தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story