திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 11 பதவிகளுக்கு 25 பேர் போட்டி


திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 11 பதவிகளுக்கு 25 பேர் போட்டி
x

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 11 பதவிகளுக்கு 25பேர் போட்டியிடுகிறார்கள். இதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.

திருச்சி

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 11 பதவிகளுக்கு 25பேர் போட்டியிடுகிறார்கள். இதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.

இடைத்தேர்தல்

ஊரக பகுதியில் காலியிடங்களுக்கான இடைத்தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டத்தை பொறுத்த வரை நகர்புற பதவிகள் எதுவும் காலியாக இல்லை. ஆனால், ஊரக உள்ளாட்சிகளில் 17 பதவிகள் காலியாக உள்ளன. அவற்றுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 3 பேரும், லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தமங்கலம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் பளுவஞ்சி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும் போட்டியிடுகிறார்கள். இதுபோல் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 14 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளன.

போட்டியின்றி தேர்வு

இதில் திருவெறும்பூர் ஒன்றியம் பனையக்குறிச்சி ஊராட்சி 3-வது வார்டு, மணப்பாறை ஒன்றியம் எப்.கீழையூர் ஊராட்சி 5-வது வார்டு, புள்ளம்பாடி ஊராட்சி நெய்குளம் ஊராட்சி 7-வது வார்டு, தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் பிடாரமங்கலம் ஊராட்சி 3-வது வார்டு, தா.பேட்டை ஒன்றியம் சிட்லறை ஊராட்சி 9-வது வார்டு, துறையூர் ஒன்றியம் கோட்டையூர் ஊராட்சி 4-வது வார்டு ஆகிய கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளனர். இதனால் இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.

11 பதவிகளுக்கு தேர்தல்

அதே நேரம், அந்தநல்லூர் ஒன்றியத்தில் அல்லூர் ஊராட்சி 5-வது வார்டு, மணப்பாறை ஒன்றியத்தில் புத்தாநத்தம் ஊராட்சி 5-வது வார்டு, லால்குடி ஒன்றியத்தில் அரியூர் ஊராட்சி 1-வது வார்டு, மண்ணச்சநல்லூர் ஒன்றித்தில் தீராம்பாளையம் ஊராட்சி 2-வது வார்டு, 3-வது வார்டு, 5-வது வார்டு, 8-வது வார்டு ஆகிய 7 வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா 2 பேரும், தீராம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும் போட்டியிடுகிறார்கள்.

மொத்தத்தில் திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 11 பதவிகளுக்கு மட்டுமே இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக 25 பேர் களத்தில் உள்ளனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெறும். இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர்களும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகளும் ஓட்டளிக்கலாம்.

பாதுகாப்பு

அதன்பிறகு, ஓட்டுப்பெட்டிகள் சீல்வைக்கப்பட்டு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு பாதுகாப்பாக ஒரு அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்படும். பின்னர், அந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 12-ந்தேதி காலை ஓட்டு எண்ணிக்கை நடைபெறஉள்ளது.

வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, அந்தந்த வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு நேற்று வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் அந்த வாக்குச்சாவடிகளில் போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


Next Story