வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 25 பவுன் நகை-ரூ.7 லட்சம் கொள்ளை


தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வடவள்ளியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி 25 பவுன் நகை, ரூ.7 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்த காரையும் கடத்தி சென்றனர்.

கோயம்புத்தூர்

வடவள்ளி

வடவள்ளியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி 25 பவுன் நகை, ரூ.7 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்த காரையும் கடத்தி சென்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பூ வியாபாரி

கோவை வடவள்ளியை அடுத்த மருதம்நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 45). இவர் பூ மார்க்கெட்டில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி (39). இவர்களுடைய மூத்த மகன் அன்புச்செல்வன் இறந்துவிட்டார். இவர்களது 2-வது மகன் மோகன்குமார் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று காலை பெரியசாமி வழக்கம் போல் கடைக்கு புறப்பட்டு சென்றார். மோகன்குமாரும் பள்ளிக்கு சென்றார். மகேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்

இந்த நிலையில் காலை 10.30 மணிக்கு அவரது வீட்டிற்குள் மர்ம நபர்கள் 2 பேர் நுழைந்தனர். இதனைக்கண்ட மகேஸ்வரி சத்தம்போட முயன்றார். உடனே மர்ம நபர்கள் மகேஸ்வரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, பணம் எங்கே உள்ளது என்று கேட்டனர். உயிர் பயத்தினால் அவர் நகை, பணம் இருக்கும் அறையை காண்பித்தார்.

பின்னர் அந்த அறைக்கு மகேஸ்வரியை அழைத்து சென்றனர். இதற்கிடையில், மர்ம நபரில் ஒருவர் மகேஸ்வரி கழுத்தில் கிடந்த நகையை கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மற்றொரு மர்ம நபர் இந்த நகை வேண்டாம் என்று கூறி மகேஸ்வரியை கீழே தள்ளிவிட்டுள்ளார்.

நகை, பணம் கொள்ளை

இந்த அதிர்ச்சியில் அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் வெளியே கேட்காமல் இருக்க பீரோவில் இருந்து துணிகள் அனைத்தையும் அவர் மீது போட்டு மூடி, அமுக்கினர். இதனால் மகேஸ்வரி வெளியே வரமுடியாமல் தவித்தார். இதனைத்தொடர்ந்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.7 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்தனர்.

பின்னர் வெளியே வந்த மர்ம நபர்கள் அங்கு நின்றிருந்த காரையும் கடத்திக்கொண்டு தப்பிச்சென்றனர்.

போலீசார் விசாரணை

இதற்கிடையில், தன் மீது போடப்பட்டிருந்த துணிகளை எடுத்துப்போட்டுவிட்டு மகேஸ்வரி வெளியே ஓடி வந்தார். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நடந்த சம்பவம் குறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு வந்த பெரியசாமி, இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அங்கு வந்த பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன், வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை மற்றும் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

இதையடுத்து போலீசார் வீடு முழுவதும் ஆய்வு செய்து, ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா என தேடி பார்த்தனர். மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.மகேஸ்வரியின் மூத்த மகன் மரணம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கிற்கும், தற்போது நடந்துள்ள கொள்ளை சம்பவத்துக்கும் தொடர்பு உண்டா என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கோவை வடவள்ளியில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எனது கணவர், மகனை கொலை செய்ய வந்ததாக கூறினர்

மகேஸ்வரி கண்ணீர்...

வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறித்து வீட்டில் இருந்த மகேஸ்வரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-

வீட்டிற்கு வந்த 2 நபர்கள் 25 பவுன் நகை, ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்கள் தப்பிச்செல்லும்போது, நாங்கள் இங்கு கொள்ளையடிக்க வரவில்லை. உனது கணவரையும், 2-வது மகனையும் கொலை செய்ய தான் வந்தோம். ஆனால் அவர்கள் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக மாலை போட்டிருந்ததால் பணத்தை மட்டும் கொள்ளையடித்து செல்கிறோம் என்று கூறிவிட்டு சென்றனர். இதனால் எனக்கு பயமாக உள்ளது. கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் கண்டுபிடித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதனால் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

--------------------

வீட்டின் மாடியில் படுத்திருந்த கொள்ளையர்கள்

பூ வியாபாரி வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக போலீசார் அக்கம்பக்கத்தில் வசிப்பர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் அதிகாலையில் பெரியசாமி வீட்டின் மாடியில் 2 வாலிபர்கள் படுத்து இருந்ததாக தெரிவித்தனர்.

இதனால் கொள்ளையடிக்க வந்தவர்கள் இரவில் மொட்டை மாடியில் படுத்து தூங்கிவிட்டு, பின்னர் வீட்டில் உள்ளவர்களின் நடமாட்டத்தை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசாார் தெரிவித்தனர்.


Next Story