25 தமிழர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்


25 தமிழர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:47 PM GMT)

இஸ்ரேலில் இருந்து தொடர்பு கொண்ட 25 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

விழுப்புரம்

செஞ்சி

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

25 பேர் தொடா்பு

இஸ்ரேலில் போர் காரணமாக அந்த நாட்டில் உள்ள தமிழர்கள் தொடர்பு கொள்வதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் எங்கள் துறை மூலமாக 3 தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த எண்களை தொடர்பு கொண்டு தங்களுடைய பிரச்சினைகளை அவர்கள் பதிவு செய்தால் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும். அதன்படி இதுவரை 25 பேர் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பான நிலையை உருவாக்கி கொடுத்து இருக்கிறோம்.

பாதுகாப்பாக இருக்கிறோம்

இந்திய தூதரகம் மூலமாக பதிவு செய்து இங்கு தொடர்பு கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் நேற்று முன்தினம் அவர்களிடம் விசாரித்தபோது நாங்கள் பாதுகாப்பான நிலையில் உள்ளோம், எந்த விதமான பிரச்சினையும் இல்லை, பிரச்சினைகள் ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்கிறோம் என்று சென்னை தாம்பரத்தை சேர்ந்த சகோதரர் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு அங்கு கல்வி பயின்று வரும் கோவையை சேர்ந்த 3 மாணவர்கள் தொடர்பு கொண்டு நாங்களும் பாதுகாப்பான நிலையில் இருக்கிறோம், தேவைப்பட்டால் அரசின் உதவியை நாடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

தமிழக அரசு உதவும்

பல்வேறு நாடுகளில் இந்த மாதிரி பிரச்சினைகள் வரும்போது தமிழக அரசு தாய் உள்ளத்தோடு அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து அவர்களின் இல்லம் வரை சென்று ஒப்படைக்கின்ற பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். அதேபோல் இங்கிருந்து தேவைப்பட்டால் அந்த உதவிகளை நிச்சயமாக தமிழக அரசு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story