பதிவுத்துறையில் நடப்பு ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு; அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி


பதிவுத்துறையில் நடப்பு ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு; அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி
x

பதிவுத்துறையில் நடப்பு ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.

திருச்சி

சார்பதிவாளர் அலுவலகங்கள்

திருச்சி மேற்கு தாலுகாவில் தற்போது திருச்சி கோர்ட்டு அருகில் சார்பதிவாளர் அலுவலகம் இணை எண்-1 மற்றும் 3, உறையூர் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன. இதில் இணை எண்-1 சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த நிதியாண்டு 8,486 ஆவணங்களும், இணை எண்-3 சார்பதிவாளர் அலுவலகத்தில் 5,523 ஆவணங்களும், உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 11,381 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

மற்ற சார்பதிவாளர் அலுவலகங்களை ஒப்பிடும்போது இணை எண்-3 சார்பதிவாளர் அலுவலகத்தில் குறைவான அளவில் தான் ஆவணங்கள் பதிவாகி உள்ளன. இணை எண்-1 மற்றும் உறையூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக அளவில் ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

புதிய அலுவலகம்

அதை கருத்தில் கொண்டு இணை எண்-1 மற்றும் உறையூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து சில வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக தில்லைநகர் சார்பதிவாளர் அலுவலகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி தில்லைநகரில் புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கி அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து கடந்த மார்ச் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

அத்துடன், தில்லைநகரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தில்லைநகர் புதிய சார்பதிவாளர் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. புதிய அலுவலகத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு (நகராட்சி நிர்வாகத்துறை), பி.மூர்த்தி (வணிகவரி மற்றும் பதிவுத்துறை) ஆகியோர் திறந்து வைத்தனர்.

ரூ.25 ஆயிரம் கோடி வருவாய்

பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், பதிவுத்துறையில் கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு இதுவரை ரூ.8 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. பதிவுத்துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருவாய் இலக்கை அடைய ஏதுவாக, அதிகாரிகள் பணியாற்ற வேண்டியுள்ளது. பதிவுத்துறை அதிகாரிகள் இடையூறு இல்லாமல் பணியாற்ற வசதியாக, இடைத்தரகர்கள், ஆவண எழுத்தர்கள் யாரும் அலுவலகத்திற்குள் வரக்கூடாது என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது, என்றார்.

விழாவில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதன், பதிவுத்துறை துணைத்தலைவர் ராமசாமி, உதவித்தலைவர்கள் ராஜா, சுரேஷ்குமார், மாவட்ட பதிவாளர் கார்த்திகேயன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், சார்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story