ஆவணத்துக்கு அனுமதி தர ரூ.25 ஆயிரம் லஞ்சம்; பத்திரப்பதிவு அதிகாரி, உதவியாளர் அதிரடி கைது
ஆவணத்துக்கு அனுமதி வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அதிகாரி மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை குறளகம் வளாகத்தில் பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி.யின் கட்டுப்பாட்டில் மாற்றுப்பணி, பதிவுத்துறை உதவி செயல் என்ஜினீயர் அலுவலகம் இயங்கி வருகிறது. சார் பதிவாளர் அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் விற்பனை பத்திரங்கள் இங்கு ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும்.
இந்த அலுவலகத்தின் உதவி செயல் என்ஜினீயராக ரமேஷ் என்பவர் பணியில் இருந்தார். அவருக்கு உதவியாக இளநிலை உதவியாளர் விஜயகுமார் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வக்கீல் ஒருவர் தனது வாடிக்கையாளர்களின் 11 ஆவணங்களை தயார் செய்து ஆவணப்படுத்தி இருந்தார். இந்த ஆவணங்கள் கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு ஆய்வு பணிக்காக குறளகத்தில் உள்ள உதவி செயல் என்ஜினீயர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அதிரடி கைது
இந்த ஆவணத்தை உதவி செயல் என்ஜினீயர் ரமேஷ் ஆய்வு செய்தார். அப்போது அதில் ஒரு கிரய ஆவணத்துக்கு பற்றாக்குறை முத்திரை தீர்வை இருந்துள்ளது. எனவே இதனை தவிர்த்து மீதமுள்ள 10 ஆவணங்களுக்கு அனுமதி வழங்கிட ஒரு ஆவணத்துக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் அந்த தொகையை குறைத்து ரூ.2 ஆயிரத்து 500 ஆயிரம் வீதம் ரூ.25 ஆயிரம் பணம் தந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும் என்று உதவி செயல் என்ஜினீயர் ரமேஷ், இளநிலை உதவியாளர் விஜயகுமார் ஆகியோர் கூறி உள்ளனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் வக்கீல் புகார் அளித்தார். அதனடிப்படையில் அவர், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைக்கு ஏற்ப ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை எடுத்து வந்தார். லஞ்சப் பணத்தை குறளகத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து அவர்கள் 2 பேரும் நேற்று வாங்கினார்கள். அப்போது அவர்கள் 2 பேரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கினார்கள்.
பின்னர் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.