வீட்டில் பதுக்கிய 2,500 மதுபாட்டில்கள் பறிமுதல்


வீட்டில் பதுக்கிய 2,500 மதுபாட்டில்கள் பறிமுதல்
x

கொடைரோடு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தி.மு.க. பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

தி.மு.க. பிரமுகர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஜெ.மெட்டூரை சேர்ந்தவர் காசிமாயன் (வயது 45). தி.மு.க. பிரமுகர். இவர், தனது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷேக்தாவூத் தலைமையிலான போலீசார், காசிமாயன் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

2,500 மதுபாட்டில்கள் பறிமுதல்

இதைத்தொடர்ந்து வீட்டின் முன்பு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்ற ஆட்டோவில் சோதனை செய்தபோது, அதிலும் 200 மதுபாட்டில்கள் பெட்டிகளில் இருந்தது. அந்த பாட்டில் களின் மூடிகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை. பின்னர் காசிமாயனுக்கு சொந்தமான தோட்டத்திலும் மதுபாட்டில் பெட்டிகள் இருந்தது.

இதையடுத்து போலீசார் அவற்றையும் பறிமுதல் செய்தனர். அதன்படி மொத்தம் 2,500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் தங்களது வேனில் ஏற்றினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, நிலக்கோட்டை (பொறுப்பு) போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

போலீசார் சோதனை நடத்தியபோது வீட்டில் காசிமாயன் இல்லை. எனவே ஆட்டோ டிரைவர் கதிர்வேல் (25), காசிமாயன் மனைவி தீபா (40) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபாட்டில்களில் ஸ்டிக்கர் இல்லாததால், அவை போலி மதுபானமா என்று கண்டறிய கலால்துறை ஆணையர் ஜெயசந்திரகலா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிமாயனை வலைவீசி தேடி வருகின்றனர். தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story