கோவையில் 2,500 போலீசார் கண்காணிப்பு
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் பஸ், ரெயில் நிலையம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கோவை
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் பஸ், ரெயில் நிலையம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சுதந்திர தின விழா
நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்தி குமார் கலந்து கெண்டு தேசிய கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை மாநகரில் 1,500 போலீசாரும், புறநகர் பகுதியில் 1,000 போலீசார் என மொத்தம் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் ஆகிய பஸ் நிலையங்கள், ரெயில்நிலையங்கள், மார்க்கெட்டுகள், வழிபட்டு தளங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பழைய குற்றவாளிகள்
போலீசார் ரோந்து பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. குற்றவழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்று சமீபத்தில் வெளியே வந்த பழைய குற்றவாளிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மத மோதல்களை தூண்டும் வகையில் கருத்துகள் பதிவிடுவர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இதுதவிர கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ள நபர்கள், மேலும் கோவை வந்த வெளிநாட்டவர்கள் விபரங்கள் உள்ளிட்டவற்றை உளவுத்துறை போலீசார் சேகரித்து வருகின்றனர். பொதுஇடங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரியும் நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான நிலையம்
கோவை ரெயில் நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது. ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் செயல்பாடுகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரெயிலில் அனுப்பப்படும் பார்சல்களும் சோதனை செய்யப்படுகின்றன.
சுதந்திரதினத்தையொட்டி கோவை விமானநிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இங்கு வரும் பயணிகளும் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே விமானம் ஏற அனுமதிக்கப்படுகிறார்கள். சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை மாநகரம் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.