2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, மண்குவளை கண்டெடுப்பு


2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, மண்குவளை கண்டெடுப்பு
x

கமுதி அருகே 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, மண்குவளை கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள செய்யாமங்கலம் கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு கண்மாய் வரத்து கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்றது. அப்போது அங்கு ஒரு பகுதியில் 10 முதல் 20 வரையிலான முதுமக்கள் தாழிகள் பூமிக்கு அடியில் இருப்பது தெரிய வந்தது.

இந்தநிலையில் இதே கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகானந்தம் என்பவர் சிதைந்து கிடந்த புதைந்து கிடந்த முதுமக்கள் தாழிகளை தோண்டி பார்த்துள்ளார். அதில் வித்தியாசமான நிறத்தில் மண், அதனுள் சிறிய வகை கருப்பு, சிவப்பு நிறத்தில் மண்குவளைகள், எலும்புக்கூடுகள், பட்டையான இரும்பு கம்பிகள் ஆகியவை இருந்தது தெரியவந்தது.

அதன் அருகே கீழடியில் கிடைத்ததை போன்று 2,500 ஆண்டுகள் பழமையான 3 அடுக்கு உறைக்கிணறு புதைந்து இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து முருகானந்தம் வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த அதிகாரியும் பார்வையிட வரவில்லை என புகார் தெரிவித்தார்.

நடவடிக்கை

இதுதொடர்பாக தொல்லியல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து விசாரித்தபோது வைகை ஆற்றின் கிளை ஆறுகளான கிருதுமால்நதி குண்டாறு படுக்கையில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்ததாக அடையாளங்கள் கிடைத்துள்ளன. முதுமக்கள் தாழி, மண்குவளை, உறைகிணறு ஆகியவை 2,500 முதல் 3,000 ஆண்டுகள் பழமையானது என தெரிவித்து உள்ளனர்.

எனவே செய்யாமங்கலம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் அகழாய்வு செய்தால் தமிழர்களின் வாழ்வியல் சிறப்புகள் தெரியவரும் எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story