கோவையில் 257 விநாயகர் சிலைகள் கரைப்பு


கோவையில் 257 விநாயகர் சிலைகள் கரைப்பு
x
தினத்தந்தி 21 Sep 2023 7:45 PM GMT (Updated: 22 Sep 2023 2:08 PM GMT)

கோவையில் நேற்று 257 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் நேற்று 257 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி

நாடுமுழுவதும் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை நகரில் வீடுகள் மற்றும் கோவில் பகுதியில் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கடந்த 2 நாட்களாக கரைக்கப்பட்டு வந்தன. இதற்காக குறிச்சிகுளம், முத்தண்ணன் குளம், குனியமுத்தூர் குளம், சரவணம் பட்டி சின்னதம்பி குட்டை ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

பலத்த போலீஸ் பாதுகாப்பும் செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இறுதிநாளான நேற்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பாரத்சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகளின் முத்தண்ணன் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. முன்னதாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட்டது.

257 சிலைகள் கரைப்பு

அதில் இந்து முன்னணி சார்பில் தெப்பக்குளம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை தொடங்கிவைத்து பேசினார். பாரத்சேனா சாா்பில் மாநில தலைவர் செந்தில் கண்ணன், மாவட்ட அமைப்பாளர் குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்று ஊர்வலமாக சென்று குளத்தில் விநாயகர் சிலைகளை கரைத்தனர். முன்னதாக விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் முத்தண்ணன் குளத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதிநாளான நேற்று ஒரே நாளில் மொத்தம் 257 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.



Next Story