வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25,715 பேர் விண்ணப்பம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25,715 பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 28 Nov 2022 6:45 PM GMT (Updated: 29 Nov 2022 4:03 PM GMT)

குமரி மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25,715 பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25,715 பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 1-1-2023 -ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தொகுதிவாரியான வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த 9-ந் தேதி குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், தொகுதி மற்றும் முகவரி மாற்றம், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பாக 8-12-2022 வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்களான 6, 6 ஏ, 6 பி, 7 மற்றும் 8 வழங்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

25,715 பேர் விண்ணப்பம்

அதன்படி கடந்த 12, 13-ந் தேதிகளிலும், 26, 27-ந் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த சிறப்பு முகாம்கள் நேற்று கன்னியாகுமரி தொகுதியில் 310 வாக்குச்சாவடிகளிலும், நாகர்கோவில் தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளிலும், குளச்சல் தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளிலும், பத்மநாபபுரம் தொகுதியில் 270 வாக்குச்சாவடிகளிலும், விளவங்கோடு தொகுதியில் 272 வாக்குச்சாவடிகளிலும், கிள்ளியூர் தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளிலும் என மொத்தம் 1695 வாக்குச்சாவடிகளில் நடந்தது. இந்த சிறப்பு முகாம்களில் இளம் வாக்காளர்களும், விடுபட்ட வாக்காளர்களும் ஆர்வமுடன் வந்து விண்ணப்பித்தனர்.

பெயர் சேர்க்க கன்னியாகுமரி தொகுதியில் 5833 பேரும், நாகர்கோவில் தொகுதியில் 4142 பேரும், குளச்சல் தொகுதியில் 3810 பேரும், பத்மநாபபுரம் தொகுதியில் 3421 பேரும், விளவங்கோடு தொகுதியில் 3867 பேரும், கிள்ளியூர் தொகுதியில் 4642 பேரும் என மொத்தம் 25,715 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

38,114 மனுக்கள்

அதேபோல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்ய 4456 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் திருத்தம், முகவரி திருத்தத்துக்காக 5026 பேரும், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் சேர்க்க 2917 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 9-ந் தேதி முதல் கடந்த 27-ந் தேதி முடிய கன்னியாகுமரி தொகுதியில் 8945 வாக்காளர்களும், நாகர்கோவில் தொகுதியில் 6775 பேரும், குளச்சலில் 6501 பேரும், பத்மநாபபுரம் தொகுதியில் 5538 பேரும், விளவங்கோடு தொகுதியில் 4861 பேரும், கிள்ளியூர் தொகுதியில் 5494 பேரும் என மொத்தம் 38,114 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.


Next Story