கேட்பாரற்று கிடந்த 26 கிலோ புகையிலை பொருட்கள்


கேட்பாரற்று கிடந்த 26 கிலோ புகையிலை பொருட்கள்
x

கேட்பாரற்று கிடந்த 26 கிலோ புகையிலை பொருட்கள்

தஞ்சாவூர்

தஞ்சை வழியாக சென்ற ராமேஸ்வரம் விரைவு ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 26 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனிப்படைகள்

தமிழகத்தை போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என தமிழக போலீஸ்துறைக்கும், போலீஸ்துறை சார்ந்த அமைப்பிற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன்படி தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்துபவர்களையும் கைது செய்து வருகின்றனர்.

தீவிர சோதனை

இந்தநிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரெயில்களில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை முதுநிலை ஆணையர் ராமகிருஷ்ணன் அறிவுரையின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக செல்லும் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீஸ்காரர்கள் ராஜ்குமார், விஜயகாந்த் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக சென்ற சோழன் விரைவு ரெயிலில் சோதனை செய்தனர். இந்த ரெயில் மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு செல்லும் வரை ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.

கேட்பாரற்று கிடந்த புகையிலை, குட்கா

பின்னர் மயிலாடுதுறையில் இறங்கிய இந்த தனிப்படையினர் மீண்டும் புவனேஸ்வரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற ரெயிலில் ஏறி சோதனை செய்து வந்தனர். அப்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி ஒன்றில் கழிவறை அருகே கேட்பாரற்று 3 பைகள் கிடந்தன. இதை பார்த்த தனிப்படையினர் சந்தேகத்தின்பேரில் இந்த பைகள் யாருடையது? என்று அந்த பெட்டியில் பயணம் செய்தவர்களிடம் விசாரணை செய்தனர்.

அப்போது அந்த 3 பைகளையும் உரிமை கொண்டாட யாரும் வரவில்லை. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த தனிப்படையினர் அந்த பைகளை திறந்து பார்த்தனர். அப்போது அதனுள்ளே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற பொருட்கள் இருந்தன. மொத்தம் 26 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.52 ஆயிரத்து 400 ஆகும். இவைகளை தனிப்படையினர் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story