26 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு


26 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர்மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 26 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர்

26 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கடலூா் வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த 8 பேருக்கும், பண்ருட்டி பகுதியை சோ்ந்த 5 பேருக்கும், குறிஞ்சிப்பாடி பகுதியை சோ்ந்த 3 போ், நெய்வேலியை சோ்ந்த ஒருவா் உள்பட 26 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 11 போ் பெண்கள் ஆவா்.

இதையடுத்து அவர்கள் 26 பேரும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 73 பேரும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். ஏற்கனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 38-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆஸ்பத்திரியில் குவிந்த நோயாளிகள்

இதற்கிடையே நேற்று சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் பதிவு சீட்டு வாங்கும் இடத்தில் நோயாளிகள் கூட்டம் அலைமோதியது. பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று சென்றனர். இதில் 3 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவிக்கப்பட உள்ளது.

இதேபோல் சிதம்பரத்தில் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


Next Story