தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,620 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,620 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 14 May 2023 12:30 AM IST (Updated: 14 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,620 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,620 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) மாதவ ராமானுஜம் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 5 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளத்தில் தலா ஒரு அமர்வு நடைபெற்றது.

இதில் சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

இதில், நீதிபதிகள், காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2,620 வழக்குகள் தீர்வு

வங்கி வாராக்கடன் வழக்குகளில் 505 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 335 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.15 கோடியே 81லட்சத்து 77 ஆயிரத்து 939 ஆகும். மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 2 ஆயிரத்து 368 வழக்குகளில் 2 ஆயிரத்து 285 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் தீர்வு தொகை ரூ.2 கோடியே 45 லட்சத்து 77 ஆயிரத்து 530 ஆகும். ஒட்டுமொத்தமாக 2 ஆயிரத்து 873 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 2 ஆயிரத்து 620 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.18 கோடியே 27லட்சத்து 55 ஆயிரத்து 469 ஆகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான (பொறுப்பு) பிஸ்மிதா, முதுநிலை நிர்வாக உதவியாளர் தாமரை செல்வம், இளநிலை நிர்வாக உதவியாளர் முத்து லெட்சுமி, பணியாளர்கள் பால் செல்வம், ஆர்.சத்யா பாண்டி, சவரி முத்து ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story