ரூ.2,659 கோடி கடன் வழங்க இலக்கு
நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.2,659 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.2,659 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
கடன் திட்ட அறிக்கை
நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், 2022-2023-ம் ஆண்டிற்கு கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்படுகிறது. அதேபோல் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு கடன்களும், வணிக ரீதியான கடன்களும் வங்கிகள் மூலம் வழங்கப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் வங்கிகள் கடன் இலக்கு நிர்ணயம் செய்வது வழக்கம்.
இலக்கு நிர்ணயம்
இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் 2022-2023-ம் ஆண்டிற்கு ரூ.2,659.14 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்க ரூ.2,243.13 கோடியும், குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மேம்பாட்டுக்கு ரூ.295.40 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.123.11 கோடியும் கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து கனரா வங்கி சார்பில் இத்தலார், தேனாடுகம்பை மற்றும் ஊட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.80 லட்சம் மதிப்பில் கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் மகாவீர்சித்ரன், கனரா வங்கி மண்டல மேலாளர் சதீஷ்குமார், யூனியன் பேங்க் ஆப் இந்தியா உதவி பொது மேலாளர் ரவீந்திரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகசிவா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.