திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது


திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில்   மகாதீபம் ஏற்றப்பட்டது
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்திபரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்று பக்திபரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

தீபத்திருவிழா

திருவண்ணாமலையில் உள்ள உலகபிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்கிறது. இங்குள்ள மலையையே சிவனாக பக்தர்கள் வணங்கி வருகின்றனர். இந்த மலை 2,668 உயரம் கொண்டதாகும். நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் இந்த கோவில் திகழ்கிறது.

ஒவ்வொரு பவுர்ணமியின்போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் இந்த மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

திருமாலுக்கும், பிரம்மாவிற்கும் இடையே ஏற்பட்ட 'தான்' என்ற அகந்தையை போக்க சிவபெருமான், திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். இந்த நாளே கார்த்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கார்த்திகை தீபத்திருவிழாவானது 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி அளித்த தீபத்திருநாளான 10-ம் நாள் விழாவின்போது அதிகாலை கோவில் வளாகத்தில் 'பஞ்ச பூதங்களாக திகழ்வதும் இறைவனே' என்பதை விளக்கும் வகையிலும், உலகத்தின் இயக்கத்தை நடத்துவதும், உயிர்களை காப்பதும் 'ஜோதி'தான் என்பதை விளக்கும் வகையிலும் கருவறைக்கு எதிரே உள்ள அர்த்த மண்டபத்தில் சூரிய பகவான் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பின்னர் பரணி தீபம் அனைத்து சன்னதிகளுக்கும் எடுத்து செல்லப்படும். தொடர்ந்து மாலையில் மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

கட்டுப்பாடுகள் தளர்வு

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சாமி வீதி உலா மாடவீதிகளில் நடைபெறாமல், கோவில் வளாகத்துக்குள் பக்தர்களின்றி நடைபெற்றது.

கடந்த ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு முன்பிருந்ததைபோல் விழா நடைபெற்றது.

அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும் இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலாவந்தனர்.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 3-ந் தேதி சிறப்பாக நடைபெற்றது. 'அரோகரா' கோஷத்துடன் பக்தர்கள் வெள்ளத்தில் தேர்கள் மாடவீதிகளை வலம் வந்தன.

இதனிடையே 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரை வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. தீபம் ஏற்றப்படுவதற்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நெய், தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் காடாதுணியால் ஆன திரிகள் தயாராக இருந்தன.

பக்தர்கள் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சிறப்பு பஸ்களும், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான சிறப்பு ரெயில்களும் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டன. அவற்றின் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் வந்து குவிய தொடங்கினர். எங்குபார்த்தாலும் பக்தர்களாகவே காட்சியளித்தனர். இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றன.

இந்த நிலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று மாலை, மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

பரணி தீபம்

பின்னர் கோவில் கருவறைக்கு எதிரே உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை சிவாச்சாரியார்கள் செய்தனர். அருணாசலேஸ்வரருக்கு தீபாராதனை செய்யப்பட்டதும், வேதமந்திரங்கள் முழங்க அதிகாலை 3.35 மணிக்கு பரணி தீபம் ஏற்றினர். பின்னர் அதிலிருந்து பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு தீபத்தை வழிபட்டனர்.

தொடர்ந்து பரணி தீபம் கோவில் பிரகாரத்தை சுற்றி எடுத்து வரப்பட்டு வைகுந்த வாயில் வழியாக மகா தீபம் ஏற்றப்படும் மலைக்கு காட்சி கொடுக்கப்பட்டது. அதன்பின் அங்கிருந்து உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டு அங்கு பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது.

அம்மன் சன்னதி, சாமி சன்னதிகளுக்கு வெளியே தரிசனத்திற்காக பரணி தீபம் கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. பின்னர் காலபைரவர் சன்னதியில் வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் இந்தாண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் பரணிதீபத்தை தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

தீர்த்தவாரி

இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் கோவிலில் சாமி சன்னதியில் இருந்து பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஆடியபடி தனித்தனியாக வெளியே வந்து சாமி சன்னதி முன்பு உள்ள தீப மண்டபத்தில் இருந்த தங்க விமானத்தில் எழுந்தருளினர்.

அதைத்தொடர்ந்து சுமார் 6 மணியை நெருங்கும்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில் 2668 அடி உயர மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

அதனை கண்டு தரிசிப்பதற்காக நகர் முழுவதும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று கொண்டிருந்த பக்தர்களும், நகரின் வீதிகள் மற்றும் வீடுகளின் மாடிகளில் நின்றிருந்த பக்தர்களும் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்திகோஷம் எழுப்பினர்.

20 ஆயிரம் போலீசார்

விழாவையொட்டி ஏராளமான போலீசார், கமாண்டோ பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மகா தீபத்தை காண திருவண்ணாமலை நகருக்கு வெளியூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்து தொடர்ந்து வந்துகொண்டே இருந்தனர். பாதுகாப்பு பணியில் சுமார் 20 ஆயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன், கோவில் இணை ஆணையர் அசோக்குமார், தி.மு.க. மருத்துவரணி மாநில துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், நகராட்சி கமிஷனர் முருகேசன், நகர மன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சண்டிகேஸ்வரர் உற்சவம்

நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்றவண்ணம் உள்ளனர். இன்று (புதன்கிழமை) பவுர்ணமி என்பதால் தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்று கொண்டே உள்ளனர். தொடர்ந்து இன்று சந்திரசேகரர் தெப்பல் உற்சவம், நாளை (வியாழக்கிழமை) பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம், 10-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த உற்சவம் கோவில் அய்யங்குளத்தில் நடைபெறுகிறது.


Next Story