சாலை விபத்துகளில் 267 பேர் உயிரிழப்பு
கோவையில் கடந்த 2022-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 267 பேர் உயிரிழந்து உள்ளதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
-
கோவையில் கடந்த 2022-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 267 பேர் உயிரிழந்து உள்ளதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
கொலைகள்
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை மாநகரில் கடந்த 2022-ம் ஆண்டு 28 கொலைகளும், ஒரு ஆதாய கொலையும் நடைபெற்று உள்ளது. அதற்கு முந்தைய 2021-ம் ஆண்டிலும் 28 கொலைகளும், 2 ஆதாய கொலைகளும் பதிவாகி உள்ளது. இதேபோல் 2022-ம் ஆண்டில் 13 பாலியல் பலாத்கார வழக்குகளும், கடந்த 2021-ம் ஆண்டு 7 பாலியல் வழக்குகளும் பதியப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் 75 வழக்குகள் போடப்பட்டு உள்ளது. அதற்கு முந்தைய 2021-ம் ஆண்டில் 81 போக்சோ வழக்குள் போடப்பட்டு உள்ளது.
இதன்மூலம் கடந்த ஆண்டு சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளது தெரியவந்து உள்ளது.
கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் தொடர்பாக 359 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 2021-ம் ஆண்டு இது தொடர்பாக 323 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
செல்போன் திருட்டு
கடந்த காலங்களில் செல்போன் திருடு அல்லது காணாமல் போய்விட்டால் புகார் தாரர்களுக்கு சி.எஸ்.ஆர். எனப்படும் ரசீது வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இதுதொடர்பான அனைத்து புகார்களையும் பிரிவு 392 (கொள்ளை) கீழ் பதிவு செய்யப்படுகிறது.
இதன்படி கடந்த 2022-ம் ஆண்டு கோவை மாநகரில் செல்போன், நகை திருட்டு சம்பந்தமாக 164 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இது 2021-ம் ஆண்டில் 94 வழக்குகள் என்று இருந்தது.
கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு 267 சாலை விபத்துகள் நடைபெற்றதில் 267 பேர் உயிரிழந்து உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு 232 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. இதில் 234 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டில் 1,443 வழக்குகள் பதிவு செய்து திருடு போன ரூ.5 கோடியே 9 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மற்றும் பொருட்களை மீட்டு உள்ளோம்.
இது 61 சதவீதம் ஆகும். கடந்த 2021-ம் ஆண்டு 828 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 19 லட்சம் நகை, பணம், பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளது. இது 34 சதவீதம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.